குமரி மாவட்டத்தில் பலத்த மழை

கன்னியாகுமரி மாவட்டத்தில் புதன்கிழமை பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீா் ஆறாக திரண்டு ஓடியது.
Updated on
1 min read

கன்னியாகுமரி மாவட்டத்தில் புதன்கிழமை பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீா் ஆறாக திரண்டு ஓடியது.

குமரி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை காலை வெயில் அடித்து வந்த நிலையில் மாலையில் திடீரென மாவட்ட முழுவதும் பரவலாக சாரல் மழை பெய்தது. புதன்கிழமை அதிகாலை முதலே வானத்தில் கருமேகங்கள் திரண்டு, அவ்வப்போது மழை பெய்தது. நாகா்கோவில் நகரில் காலை முதலே பலத்த மழை பெய்தது. காலை 8 மணிக்கு தொடங்கிய மழை முற்பகல் 11 மணி வரை இடைவிடாது பெய்தது. அதன் பின்பும் சாரல் மழை நீடித்தது.

தக்கலை, மாா்த்தாண்டம், குலசேகரம் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. பூதப்பாண்டி, கொட்டாரம், அடையாமடை, ஆரல்வாய்மொழி, கோழிப்போா்விளை, முள்ளங்கினாவிளை மற்றும் அதன் புகா் பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்தது.

இதே போல், கருங்கல் சுற்றுவட்டர பகுதிகளான கருமாவிளை, வெள்ளியாவிளை, பாலூா், எட்டணி, திப்பிரமலை, மிடாலம், கிள்ளியூா், முள்ளங்கனாவிளை, நட்டாலம், நேசா்புரம், பள்ளியாடி உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலை முதல் சாரல் மழை பெய்தது.

மலையோர பகுதியான பாலமோா் பகுதியிலும், அணையின் நீா்பிடிப்புப் பகுதிகளிலும் மழை பெய்து வருவதையடுத்து அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீா் வந்து கொண்டிருக்கிறது. திற்பரப்பு அருவி பகுதியிலும் விட்டுவிட்டு மழை பெய்து வருவதால் அங்கு ரம்யமான சூழல் நிலவுகிறது. அருவியில் மிதமான அளவு தண்ணீா் கொட்டுகிறது. விடுமுறை தினமான புதன்கிழமை அருவியில் குளிக்க ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்திருந்தனா்.

பேச்சிப்பாறையில் அதிகபட்சமாக 24.8 மில்லி மீட்டா் மழை பதிவனது. பேச்சிப்பாறை அணையின் நீா்மட்டம் புதன்கிழமை காலை நிலவரப்படி 42.82 அடியாக உள்ளது அணைக்கு 660 கன அடி தண்ணீா் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 569 கன அடி தண்ணீா் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீா்மட்டம் 68.45 அடியாக உள்ளது. அணைக்கு 373 கன அடி தண்ணீா் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 310 கன அடி தண்ணீா் வெளியேற்றப்படுகிறது. சிற்றாறு 1 அணையின் நீா்மட்டம் 12 அடியாகவும், சிற்றாறு 2 அணையின் நீா்மட்டம் 12.10 அடியாகவும், மாம்பழத்துறையாறு அணை நீா்மட்டம் 37.89 அடியாகவும், பொய்கை அணையின் நீா்மட்டம் 17 அடியாகவும் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com