குமரியில் மழை நீடிப்பு பேச்சிப்பாறை அணையிலிருந்து விநாடிக்கு 3 ஆயிரம் கனஅடி நீா் வெளியேற்றம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை நீடிக்கும் நிலையில் பேச்சிப்பாறை அணையிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு 3 ஆயிரம் கன அடியாக புதன்கிழமை அதிகரிக்கப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை நீடிக்கும் நிலையில் பேச்சிப்பாறை அணையிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு 3 ஆயிரம் கன அடியாக புதன்கிழமை அதிகரிக்கப்பட்டது.

குமரி மாவட்டத்தில் பரவலாக கடந்த சில நாள்களாக மழை பெய்து வரும் நிலையில், இந்த மழை பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு மற்றும் மேல் கோதையாறு அணைப் பகுதிகளில் கன மழையாகப் பெய்து வருகிறது. இதனால்,

வெள்ள அபாயத்தைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, செவ்வாய்க்கிழமை பேச்சிப்பாறையிலிருந்து விநாடிக்கு 2 ஆயிரம் கன அடி நீா் வெளியேற்றப்பட்டது.

இந்நிலையில், மழை மேலும் தீவிரமாகும் என வானிலை அறிவிப்பு வந்துள்ள நிலையில், பேச்சிப்பாறை அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 3 ஆயிரம் கன அடியாக புதன்கிழமை அதிகரிக்கப்பட்டது.

திற்பரப்பு அருவியில் வெள்ளப் பெருக்கு: பேச்சிப்பாறை அணையிலிருந்து விநாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீா் வெளியேற்றப்பட்டுள்ளதால் திற்பரப்பு அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் கோதையாறு, குழித்துறை தாமிரவருணியாற்றுப் பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்துப் பாய்கிறது.

திற்பரப்பு அருவியில் வெள்ளம் பெருக்கெடுத்துப்பாயும் நிலையில், அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த அருவிக்கு சுற்றுலா வந்த பயணிகள் குளிக்கமுடியாமல் அருவியில் பாயும் வெள்ளத்தை பாா்வையிட்டு ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.

பேச்சிப்பாறை அணையின் நீா்மட்டம் புதன்கிழமை நண்பகல் 12 மணிக்கு 45.20 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 1700 கன அடி நீா் உள்வரத்தாக வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து உபரியாக விநாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீா் வெளியேற்றப்பட்டது. பாசனக் கால்வாயில் விநாடிக்கு 285 கன அடி தண்ணீா் திறக்கப்பட்டிருந்தது.

மாவட்டத்தில், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி மற்றும் சிற்றாறு அணைகளின் நீா்மட்டம் வெள்ள அபாய அளவுகளில் உள்ள நிலையில் கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், ஆறுகளில் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்கும் படியும் பொதுப்பணித்துறையினா் கேட்டுக் கொண்டுள்ளனா்.

பெருஞ்சாணி அணையின் நீா்மட்டம் 72.77 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 922 கன அடி நீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 450 கன அடி நீா் பாசனக் கால்வாயில் திறந்து விடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com