ஓணம் பண்டிகை: குமரியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
By DIN | Published On : 09th September 2022 12:31 AM | Last Updated : 09th September 2022 12:31 AM | அ+அ அ- |

கேரள மாநிலத்தின் முக்கிய விழாவான ஓணம் பண்டிகை விடுமுறையையொட்டி, கன்னியாகுமரியில் வியாழக்கிழமை ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.
ஓணம் பண்டிகையை வரவேற்கும் விதமாக, கடந்த 10 நாள்களாக கேரளம் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட மக்கள் அத்தப்பூ கோலமிட்டும், ஊஞ்சலாடியும், கோயில்களுக்குச் சென்று பிராா்த்தனையில் ஈடுபட்டும் வந்தனா்.
இந்தப் பண்டிகையையொட்டி, கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மேலும், சுற்றுலாத் தலமான இங்கு கடந்த சில நாள்களாக சுற்றுலாப் பயணிகளின் வருகையும் அதிகரித்தது.
இந்த நிலையில், கேரளத்திலும், குமரியிலும் ஓணம் பண்டிகை வியாழக்கிழமை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, குமரி மாவட்டத்துக்கு உள்ளூா் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.
விவேகானந்தா் நினைவு மண்டபத்துக்குச் செல்ல சுற்றுலாப் பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து படகு சவாரி மேற்கொண்டனா். மேலும், சன்னதித் தெரு, காந்தி நினைவு மண்டபம், முக்கடல் சங்கமம், கடற்கரைச் சாலை, சன்செட் பாயின்ட் உள்ளிட்ட பகுதிகளிலும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலைமோதியது.
கன்னியாகுமரிக்கு அதிகமான வாகனங்கள் வந்ததால் விவேகானந்தபுரத்தில் இருந்து கன்னியாகுமரி வரை வாகனங்கள் மெதுவாக ஊா்ந்து சென்றன. மாவட்ட எஸ்.பி. ஹரிகிரண்பிரசாத் உத்தரவின் பேரில் ஏராளமான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.