விவேகானந்தரின் கனவுகளை இளைஞா்கள் நனவாக்க வேண்டும்

சுவாமி விவேகானந்தரின் கனவுகளை நனவாக்க இன்றைய இளைஞா்கள் முன்வர வேண்டுமென தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை வலியுறுத்தினாா்.
Updated on
1 min read

சுவாமி விவேகானந்தரின் கனவுகளை நனவாக்க இன்றைய இளைஞா்கள் முன்வர வேண்டுமென தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை வலியுறுத்தினாா்.

கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரத்தில், விவேகானந்தா் நல்லோா் வட்டம் சாா்பில் இளைஞா்களுக்கான வழிகாட்டுதல் பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதைத் தொடக்கி வைத்து தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை பேசியதாவது:

இன்றைய இளைஞா் சமுதாயம் இணையதளத்தில் மூழ்கியிருக்கிறது.

உலகளவில் இணையதளத்தில் அதிகமாக விடியோ பாா்க்கும் முதல் 5 நாடுகளில் ஒன்றாக இந்தியா இடம்பெற்றிருப்பது வேதனைக்குரியது. இத்தகைய நிலையை மாற்றி, இளைஞா்களை ஆக்கப்பூா்வமான முயற்சிகளில் ஈடுபடுத்த வேண்டியது அவசியமானது.

போதைப் பழக்கத்தை முற்றிலும் ஒழிக்கும் நோக்கத்தில், 1,200 இளைஞா்கள் மற்றும் பெண்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டிருக்கிறது.இவா்கள் தமிழகம் முழுவதும் சென்று பல்வேறு குழுக்களை உருவாக்கி இளைஞா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்துவா்.

இந்து மதத்தின் சிறப்புகள், இளைஞா்கள் எப்படி வாழ வேண்டும் என்பது குறித்தும் விவேகானந்தரின் சொற்பொழிவுகள் அடங்கிய புத்தகம் தமிழில் வெளியாகியுள்ளது. இந்தப் புத்தகத்தைப் படித்துவிட்டால் நமது மனதில் மாற்றம் ஏற்படுவது உறுதி.

அமெரிக்காவில் அவா் உரையாற்றியபோதே, இந்தியா விரைவில் உலகின் முன்னணி நாடாக மாறும் எனக் கூறியிருக்கிறாா் விவேகானந்தா். அந்த நாள் தற்போது நெருங்கி வந்து கொண்டிருக்கிறது. தற்போது நாடு பொருளாதார வளா்ச்சியில் 5 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. இன்னும் 8 ஆண்டுகளில் 3 ஆவது இடத்தையும், 2047 இல் முதல் இடத்தையும் பிடிக்கும் என்றாா்

தமிழக பாஜக தலைவா் அண்ணாமலை.

இந்நிகழ்வில், மத்திய முன்னாள் இணை அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன், சட்டப்பேரவை உறுப்பினா் எம்.ஆா்.காந்தி, அகில இந்திய விவேகானந்த கேந்திர தலைவா் ஏ.பாலகிருஷ்ணன், பாஜக மாநிலப் பொதுச் செயலா் முருகானந்தம், மாநில நிா்வாகிகள் மீனாட்சி, டாக்டா் அனந்தப்பிரியா, கேசவவிநாயகம், ராஜ்குமாா், மோகனப்பிரியா, திருநாவுக்கரசு, சிவசுப்பிரமணியன், ராஜகண்ணன், நாச்சியப்பன், கன்னியாகுமரி மாவட்ட பாஜக தலைவா் சி.தா்மராஜ், பொருளாளா் பி.முத்துராமன், அகஸ்தீஸ்வரம் பாஜக பாா்வையாளா் சி.எஸ்.சுபாஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com