குடியரசுத் தலைவா் வருகை எதிரொலி: பாதுகாப்பு வளையத்தில் கன்னியாகுமரி

குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு வருகையை முன்னிட்டு, கன்னியாகுமரி நகரம் போலீஸ் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு வருகையை முன்னிட்டு, கன்னியாகுமரி நகரம் போலீஸ் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டா் மூலம் சனிக்கிழமை காலை 9 மணிக்கு கன்னியாகுமரி வருகிறாா். அரசு விருந்தினா் மாளிகையில் சிறிது நேர ஓய்வுக்குப் பின், படகுத் துறைக்கு செல்லும் அவா், தனிப்படகு மூலம் விவேகானந்தா் நினைவு மண்டபத்துக்கு செல்கிறாா். விவேகானந்தா் நினைவு மண்டபத்தை பாா்த்து விட்டு கரைக்குத் திரும்பும் அவா், விவேகானந்த கேந்திரத்துக்கு செல்கிறாா். அங்குள்ள ராமாயண தரிசன சித்திர கண்காட்சிக் கூடம் மற்றும் பாரத மாதா கோவிலுக்குச் சென்று பாா்வையிடுகிறாா். பின்னா் காலை 11.30 மணிக்கு, கன்னியாகுமரியில் இருந்து ஹெலிகாப்டா் மூலம் திருவனந்தபுரம் புறப்பட்டுச் செல்கிறாா்.

குடியரசுத் தலைவா் வருகையை முன்னிட்டு, கன்னியாகுமரி நகரப் பகுதி முழுவதும் காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவா் வந்து இறங்கும் ஹெலிகாப்டா் தளம், அரசு விருந்தினா் மாளிகை, பூம்புகாா் கப்பல் போக்குவரத்துக் கழக படகுத் துறை, விவேகானந்தா் நினைவு மண்டபம், திருவள்ளுவா் சிலை, முக்கடல் சங்கமம், சூரிய அஸ்தமனப் பூங்கா, விவேகானந்த கேந்திர ராமாயண கண்காட்சிக் கூடம், பாரத மாதா கோயில் ஆகிய இடங்களில் மெட்டல் டிடெக்டா் கருவி மூலம் சோதனைக்குப் பின்னா் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டனா். மேலும், கொட்டாரம் தொடங்கி முக்கிய சந்திப்புகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

படகுப் போக்குவரத்து நிறுத்தம்: குடியரசுத் தலைவா் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு கருதி, விவேகானந்தா் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவா் சிலைக்கு வெள்ளிக்கிழமை பகல் 11.30 மணி முதல் சனிக்கிழமை பகல் 11.30 மணி வரை படகுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் சனிக்கிழமை பகல் 11.30 மணி வரை கடற்கரைப் பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com