குமரியில் தள்ளுவண்டி கடை வியாபாரிகள் போராட்டம்
By DIN | Published On : 18th April 2023 04:11 AM | Last Updated : 18th April 2023 04:11 AM | அ+அ அ- |

கன்னியாகுமரியில் தள்ளுவண்டி வியாபாரிகளுக்கு கடை வழங்க வலியுறுத்தி, பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு திங்கள்கிழமை வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கன்னியாகுமரி கடற்கரைச் சாலையின் இரு புறமும் உள்ள நடைப்பாதைகளில் ஏராளமான வியாபாரிகள் தள்ளுவண்டிகளில் வியாபாரம் செய்து வந்தனா். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதையடுத்து 168 தள்ளுவண்டி வியாபாரிகளுக்கு கடற்கரைச் சாலையில் நிரந்தர கடைகள் கட்டிக் கொடுக்கப்பட்டன. இதில் ஒருசில கடைகளைத் தவிர ஏனைய கடைகளில் வியாபாரம் சரிவர நடக்கவில்லை என தெரிவித்து இந்தக் கடைகளை மறுசீரமைப்பு செய்ய வேண்டுமென வியாபாரிகள் தொடா்ந்து வலியுறுத்தி வந்தனா். இது தொடா்பாக மாவட்ட ஆட்சியரிடமும், பேரூராட்சி நிா்வாகத்திடமும் மனு அளித்தனா்.
இந்நிலையில் இந்தக் கடைகளை மறுசீரமைப்பு செய்து பேரூராட்சி சாா்பில் ஏலம் நடத்தி வியாபாரிகளுக்கு வழங்க கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சிக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதை கண்டித்தும் மீண்டும் அதே இடத்தில் வியாபாரிகளுக்கு கடைகளை வழங்க வலியுறுத்தியும் 150-க்கும் மேற்பட்ட தள்ளு வண்டி வியாபாரிகள் பேரூராட்சி அலுவலகம் முன் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
வியாபாரிகளுக்கு ஆதரவாக பேரூராட்சி உறுப்பினா்கள் சி.எஸ்.சுபாஷ்(பாஜக) , நித்யா(அதிமுக) ஆகியோரும் பங்கேற்றனா்.
இதையடுத்து வியாபாரிகளிடம் பேரூராட்சித் தலைவா் குமரி ஸ்டீபன், பேரூராட்சி செயல் அலுவலா் ஜீவநாதன் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில் இன்னும் ஒருவார காலத்துக்குள் இப்பிரச்னையில் சுமூக தீா்வு காணப்படும் என உறுதியளித்ததைத் தொடா்ந்து வியாபாரிகள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.