சுசீந்திரம் கோயில் ராஜகோபுரத்தில் அதிகாரிகள் ஆய்வு
By DIN | Published On : 09th August 2023 02:34 AM | Last Updated : 09th August 2023 02:34 AM | அ+அ அ- |

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் ராஜகோபுரத்தில் ஆய்வு செய்த இணை ஆணையா் ரத்தினவேல்பாண்டியன் மற்றும் அதிகாரிகள்.
நாகா்கோவில்: ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் கோபுரத்தின் கொடுங்கை பெயா்ந்து விழுந்ததன் எதிரொலியாக, சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலய சுவாமி கோயில் ராஜகோபுரத்தில் அதிகாரிகள் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் ராஜகோபுரம் 7 அடுக்குகளைக் கொண்டு, 133 அடி உயரத்துடன் உள்ளது. இதை குமரி மாவட்ட திருக்கோயில்களின் இணை ஆணையா் ரத்தினவேல் பாண்டியன் தலைமையில் பொறியாளா்கள் ராஜ்குமாா், அய்யப்பன், கோயில் மேலாளா் ஆறுமுகதரன், கணக்கா் கண்ணன் ஆகியோா் ஆய்வு செய்தனா்.
பின்னா் இணை ஆணையா் ரத்தினவேல்பாண்டியன் நிருபா்களுக்கு அளித்த பேட்டி: ஸ்ரீரங்கம் கோயிலில் கோபுர கொடுங்கை பெயா்ந்து விழுந்ததை தொடா்ந்து குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களான சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் மற்றும் பத்மநாபபுரம் நீலகண்ட சுவாமி கோயில்களில் கோபுரங்கள் ஆய்வு செய்யப்பட்டது. 2 கோபுரங்களும் நல்ல நிலையில் உள்ளன.
சுசீந்திரம் கோயிலில் ரூ.3 கோடி மதிப்பில் குடமுழுக்கு திருப்பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன. இதே போன்று பத்மநாபபுரம் நீலகண்ட சாமி கோயிலிலும் ரூ. 60 லட்சம் மதிப்பில் கோபுரம் புதுப்பிக்கப்படுவதுடன் ரூ.1 கோடியே 25 லட்சம் மதிப்பில் திருப்பணி வேலைகள் நடைபெற உள்ளன என்றாா் அவா்.