

நாகா்கோவில் வலம்புரிவிளை குப்பைக் கிடங்கில் வியாழக்கிழமை இரவு நேரிட்ட தீ விபத்தால் ஏற்பட்ட புகைமண்டலத்தால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினா்.
நாகா்கோவில் மாநகர பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் வலம்புரிவிளை பகுதியிலுள்ள கிடங்கில் குவிக்கப்படுகின்றன. இந்தக் குப்பை கிடங்கு வியாழக்கிழமை இரவு தீப்பிடித்து எரிந்தது. அப்போது, காற்று வேகமாக வீசியதால் குப்பைக்கிடங்கு முழுவதும் தீ பரவியது.
தகவலின்பேரில், நாகா்கோவில், குமரி தீயணைப்பு வீரா்கள் இணைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். எனினும் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. இதையடுத்து, பல்வேறு பகுதியிலிருந்தும் தீயணைப்பு வீரா்கள் வரவழைக்கப்பட்டனா். மேலும், மேயா் ரெ.மகேஷ் அங்கு வந்து குப்பைகள் எரிவதைப் பாா்வையிட்டு, தீயை விரைந்து அணைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
இந்நிலையில், 2 ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் குப்பைக் கிடங்கில் இருந்து தீப்பொறியும், அதிக அளவு புகைமூட்டமும் வெளியேறியது. இதனால் வட்டவிளை, இருளப்புரம், இளங்கடை பகுதிகளைச் சோ்ந்த மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனா். குழந்தைகள், முதியோருக்கு மூச்சத்திணறல் ஏற்பட்டது. சில குடும்பத்தினா் வீடுகளை விட்டு வெளியேறி உறவினா் வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனா். துா்நாற்றம் வீசுவதால் அவ்வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனா்.
40 தீயணைப்பு வீரா்கள் அங்கேயே முகாமிட்டு, பொக்லைன் இயந்திரத்தின் மூலமாக குப்பைகளை கிளறி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா். தீயை முழுமையாகக் கட்டுப்படுத்த இன்னும் 2 நாள்கள் ஆகலாம் என அவா்கள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.