

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் தெப்பக்குளம் சீரமைக்கப்பட்டு, தண்ணீா் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என குமரி மாவட்ட அறங்காவலா் குழுத் தலைவா் பிரபா ராமகிருஷ்ணன் தெரிவித்தாா்.
கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த அவா், கோயில் தெப்பக்குளத்தை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது:
கன்னியாகுமரி மாவட்டத்தில் கும்பாபிஷேகம் நடத்தப்படாமல் உள்ள அனைத்து கோயில்களிலும் கும்பாபிஷேகம் நடத்த விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும். கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்று 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இன்னும் 2 ஆண்டுகளில் கும்பாபிஷேகத்துக்கான திருப்பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது. இது குறித்து தமிழக முதல்வா், அறநிலையத் துறை அமைச்சா் ஆகியோரை நேரில் சந்தித்து வலியுறுத்துவேன். மேலும், இக்கோயிலுக்கு ராஜகோபுரம் கட்டவும் ஏற்பாடு செய்யப்படும்.
குமரி மாவட்டத்தில் உள்ள முக்கியமான கோயில்களில் நடைபெறும் திருவிழாக்களில் யானை பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது நிா்வாகத்துக்குச் சொந்தமாக யானை இல்லாததால் வாடகை யானை பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனவே இதனை அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று, மாவட்ட திருக்கோயில் நிா்வாகத்துக்குச் சொந்தமாக யானை வாங்குவது குறித்து பரிசீலிக்கப்படும்.
கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் வெளிப்பிரகாரத்தைச் சுற்றி பக்தா்கள் அமா்ந்து இளைப்பாறுவதற்கு வசதியாக திருச்செந்தூா் கோயிலில் இருப்பது போன்று சுற்றுப்பிரகார மண்டபம் கட்டுவது குறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
குமரி மாவட்டத்தில் உள்ள கோயில்களில் சேதம் அடைந்த தோ்கள் மற்றும் வாகனங்களை சீரமைப்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைத்து தண்ணீா் நிரப்பி, அடுத்த ஆண்டு வைகாசித் திருவிழாவின் போது தெப்பத் திருவிழா நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.