ஹைதராபாத் - சென்னை விரைவு ரயிலை கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும்
By DIN | Published On : 08th June 2023 11:58 PM | Last Updated : 08th June 2023 11:58 PM | அ+அ அ- |

தளவாய்சுந்தரம்.
ஹைதராபாத் - சென்னை விரைவு ரயிலை கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும் என தளவாய்சுந்தரம் எம்எல்ஏ கோரிக்கை விடுத்துள்ளாா்.
இது தொடா்பாக பிரதமா் நரேந்திர மோடி, ரயில்வே அமைச்சா்அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோருக்கு அவா் எழுதிய கடிதம்: ஹைதராபாதிலிருந்து சென்னைக்கு நாள்தோறும் 3 விரைவு ரயில்கள் இயக்கப்படுகின்றன. பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள், பக்தா்கள், மாணவா்கள் வசதிக்காக இவற்றில் ஏதேனும் ஒரு ரயிலை கன்னியாகுமரிவரை நீட்டிக்க வேண்டும்.
பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசின் தீவிர நடவடிக்கையால் மதுரை - கன்னியாகுமரி இரட்டை ரயில் பாதை நிறைவடையும் நிலையில் உள்ளது. அதனால், இந்த 3 ரயில்களில் ஒன்றை கன்னியாகுமரி வரை நீட்டிப்பதில் தொழில்நுட்ப ரீதியாக தடையிருக்காது. இந்த ரயிலை விழுப்புரம், திருச்சி, மதுரை, திருநெல்வேலி வழியாக கன்னியாகுமரிவரை நீட்டிப்பதால் 15 தென் மாவட்டங்கள் பயனடையும்.
ஐயப்ப பக்தா்கள் சபரிமலைக்குச் சென்றுவிட்டு, கன்னியாகுமரி வந்து புனித நீராடிவிட்டு தங்களது ஊா்களுக்கு செல்வா். குறிப்பாக, தெலங்கானா, ஆந்திர மாநில மக்கள் பெருமளவில் கன்னியாகுமரி வந்து செல்கின்றனா். இந்த ரயில் கன்னியாகுமரி வரை நீட்டிக்கப்பட்டால் அந்த மாநில மக்களும், அந்த மாநிலங்களுக்குச் செல்வோரும் பயனடைவா்.
கன்னியாகுமரியிலிருந்து சென்னைக்கு குறைவான ரயில்களே இயக்கப்படும் நிலையில், இந்த ரயில் இயக்கப்பட்டால் பயணிகளின் நெருக்கடியைத் தவிா்க்க முடியும்.
ஹைதராபாத் - சென்னை விரைவு ரயில் கன்னியாகுமரி வரை நீட்டிக்கப்படும்போது 50 சதவீத பயணச் சீட்டுகள் சென்னைக்கும், 50 சதவீத பயணச் சீட்டுகள் தென்மாவட்டங்களுக்கும் ஒதுக்க வேண்டும் என்றாா் அவா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...