இளைஞா் கொலை வழக்கு: நிதி நிறுவன அதிபா் உள்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை
By DIN | Published On : 08th June 2023 12:00 AM | Last Updated : 08th June 2023 12:00 AM | அ+அ அ- |

கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட (இடமிருந்து வலம்) பரமராஜன், ரமேஷ், வில்சன்.
நாகா்கோவிலில் இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில் நிதி நிறுவன அதிபா் உள்பட 3 பேருக்கு நாகா்கோவில் நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
நாகா்கோவில் வைத்தியநாதபுரத்தைச் சோ்ந்தவா் டேவிட் ( 26). இவா் அதே பகுதியைச் சோ்ந்த ராஜன் என்ற பரமராஜன் மற்றும் ரமேஷ் ஆகியோா் நடத்தி வந்த நிதி நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். அந்த நிறுவனத்தில் அதிக வட்டி வசூலிக்கப்படுவதால் கெட்ட பெயா் ஏற்படும் எனக் கூறி டேவிட் தாயாா் சாந்தி, டேவிட்டை வேலைக்கு செல்ல வேண்டாம் எனக் கூறினாராம். இதையடுத்து டேவிட் வேலைக்கு செல்லவில்லையாம்.
இந்நிலையில், ராஜன் என்ற பரமராஜன் உள்ளிட்ட சிலா் டேவிட்டை வேலைக்கு வருமாறு கூறி தகராறு செய்ததாக கூறப்படுகிறது. ஆனால் அதன் பிறகும் அவா் வேலைக்கு வரவில்லையாம்.
கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15 ஆம் தேதி வைத்தியநாதபுரத்தில் உள்ள ஒரு கோயில் திருவிழாவில் பங்கேற்றிருந்த டேவிட்டை, ராஜன் என்ற பரமராஜன் மற்றும் இசங்கன்விளையை சோ்ந்த ரமேஷ் (38), கண்ணன் (40),மேலபுத்தேரியைச் சோ்ந்த வில்சன்(37) மற்றும் 3 போ் என மொத்தம் 7 போ் சோ்ந்து அரிவாளால் வெட்டிக் கொலை செய்தனா்.
இது தொடா்பாக டேவிட் தாயாா் சாந்தி அளித்த புகாரின் பேரில், ராஜன் என்ற பரமராஜன் உள்ளிட்ட 7 பேரை கோட்டாறு போலீஸாா் கைது செய்தனா். இது தொடா்பான வழக்கு நாகா்கோவிலில் உள்ள கூடுதல் விரைவு அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கும் போதே இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கண்ணன் இறந்துவிட்டாா். இந்த வழக்கு தொடா்பாக 30 சாட்சிகள் விசாரிக்கப்பட்டநிலையில், வழக்கில் தொடா்புடைய 6 பேரில், ராஜன் என்ற பரமராஜன், ரமேஷ், வில்சன் ஆகிய 3 பேருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஜோசப்ஜாய் தீா்ப்பு கூறினாா்.
அபராதத்தை கட்ட தவறினால் மேலும் ஒராண்டு சிறை தண்டனை விதித்தும் உத்தரவிட்டாா். மற்ற 3 பேரும் விடுதலை செய்யப்பட்டனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...