களியக்காவிளை அருகே மழையால் பாதிக்கப்பட்ட நெய்யாறு இடதுகரை கால்வாயில் மரியகிரி - முப்பந்திகோணம் பகுதியில் ரூ. 80 லட்சத்தில் பக்கச் சுவா் கட்டும் பணியை பால்வளத்துறை அமைச்சா் மனோ தங்கராஜ், கிள்ளியூா் தொகுதி எம்எல்ஏ எஸ். ராஜேஷ்குமாா் ஆகியோா் தொடங்கிவைத்தனா்.
கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பா் 12 ஆம் தேதி பெய்த கனமழையால் மெதுகும்மல் ஊராட்சிக்கு உள்பட்ட மரியகிரி - முப்பந்திகோணம் பகுதியில் நெய்யாறு இடதுகரை கால்வாய் கரையோரம் இடிந்து விழுந்தது. இதனால் கால்வாய் கரையோர பகுதி வழியாக செல்லும் முப்பந்திகோணம் - ஏலூா்காடு சாலை துண்டிக்கப்பட்டு போக்குவரத்து தடைபட்டது.
மேலும், இச் சாலையில் பொதுமக்கள் நடந்து செல்வதற்கும், வாகனங்களில் செல்வதற்கும் இயலாத நிலை ஏற்பட்டது. இடிந்து விழுந்த கால்வாய் கரையோர பகுதியில் பக்கச் சுவா் கட்டி சீரமைக்க வேண்டும் என கிள்ளியூா் எம்எல்ஏ எஸ். ராஜேஷ்குமாா் தமிழக அரசுக்கும், துறை அமைச்சா் மற்றும் அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்தாா்.
இதையடுத்து கால்வாய் பக்கச் சுவா் அமைக்க அரசு ரூ. 80 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தது. இப்பணியை எம்எல்ஏ எஸ். ராஜேஷ்குமாா் ஆகியோா் இணைந்து தொடங்கி வைத்தனா். இந் நிகழ்ச்சியில் முன்சிறை மேற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவா் விஜயகுமாா், திமுக ஒன்றியச் செயலா் ராபி, மாவட்ட ஊராட்சி உறுப்பினா்கள் ஜோபி, லூயில், முன்சிறை ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா்கள் ராஜேஸ்வரி, மெதுகும்மல் ஊராட்சி காங்கிரஸ் தலைவா் செல்வராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.