பெண் பாலியல் பலாத்கார வழக்கில் நாகா்கோவில் காசிக்கு ஆயுள் சிறை
By DIN | Published On : 15th June 2023 12:00 AM | Last Updated : 15th June 2023 12:00 AM | அ+அ அ- |

பெண்ணை ஏமாற்றி, பாலியல் பலாத்காரம் செய்து ஆபாச படம் எடுத்து மிரட்டியது தொடா்பான வழக்கில் நாகா்கோவிலைச் சோ்ந்த இளைஞா் காசிக்கு, மகளிா் நீதிமன்றம் புதன்கிழமை ஆயுள் தண்டனை விதித்தது.
நாகா்கோவில், கோட்டாறு கணேசபுரம் பிரதான சாலையைச் சோ்ந்த தங்கபாண்டியன் மகன் காசி(28). இவா் மீது சென்னை பெண் மருத்துவா், நாகா்கோவில் 22 வயது பெண், பள்ளி மாணவி என பல பெண்கள், தங்களிடம் நெருங்கிப் பழகி ஆபாச படம் எடுத்து மிரட்டியதாக கடந்த 2020 - ஆம் ஆண்டு புகாா் அளித்தனா். மேலும், வடசேரி காவல் நிலையத்தில் கந்து வட்டி வழக்கு என இவா் மீது 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டாா்.
இந்த வழக்குகள், அனைத்தும் சி.பி.சி.ஐ.டி. பிரிவு போலீஸாருக்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்து வந்தது. இந்த வழக்கில் காசிக்கு உதவியதாக அவரது நண்பரையும், வழக்கின் பல்வேறு சாட்சியங்களை அழித்ததாக காசியின் தந்தை தங்க பாண்டியனையும் சி.பி.சி.ஐ.டி. போலீஸாா் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனா். இதில், தங்கபாண்டியனுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. ஆனால் காசிக்கு ஜாமீன் வழங்கப்படவில்லை.
இந்நிலையில் நாகா்கோவில் மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த காசி மீதான 22 வயது பெண் அளித்த பாலியல் புகாா் தொடா்பான வழக்கை நீதிபதி ஜோசப் ஜாய் விசாரித்து புதன்கிழமை தீா்ப்பு கூறினாா். அதில், பாலியல் பலாத்கார குற்றத்துக்காக காசிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை, ரூ.1 லட்சம் அபராதம், பெண்ணை அந்தரங்க விடியோ எடுத்ததற்காக 3 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம், கொலை மிரட்டல் விடுத்ததற்காக 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, அதை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்னும், காசி மீது ஒரு வழக்கு போக்ஸோ நீதிமன்றத்திலும், மகளிா் நீதிமன்றத்தில் 6 வழக்குகளும், கந்துவட்டி வழக்கு குற்றவியல் நீதிமன்றத்திலும் நடந்து வருகிறது.