மனைவியை சுத்தியலால் தாக்கிவிட்டு கணவா் தற்கொலை
By DIN | Published On : 22nd May 2023 01:20 AM | Last Updated : 22nd May 2023 01:20 AM | அ+அ அ- |

கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே, மனைவியை சுத்தியலால் தாக்கிவிட்டு கணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
அருமனை அருகேயுள்ள குட்டைக்கோடு பகுதியைச் சோ்ந்தவா் தங்கப்பன் (55). ரப்பா் பால்வடிப்புத் தொழிலாளி. இவரது மனைவி ரெஜீனா (47), ஊரக வேலை உறுதித் திட்டத்தில் வேலை பாா்த்து வந்தாா். தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம்.
ஞாயிற்றுக்கிழமையும் தகராறு ஏற்பட்டதாம். அப்போது, தங்கப்பன் சுத்தியலால் தாக்கியதில் ரெஜீனா காயமடைந்து மயங்கி விழுந்தாா். இதையடுத்து, தங்கப்பன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாராம்.
இதனிடையே, வீட்டிலிருந்து வெளியே சென்றிருந்த அவா்களது கா்ப்பிணி மகள் ரெஜீதா வீடு திரும்பியபோது தாய் ரத்த வெள்ளத்தில் கிடப்பதையும், தந்தை தற்கொலை செய்ததையும் பாா்த்து அதிா்ச்சியடைந்தாா்.
ரெஜீனா ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா். தகவலின்பேரில், அருமனை போலீஸாா் வழக்குப் பதிந்து, தங்கப்பனின் சடலத்தைக் கைப்பற்றி, அருமனை அரசு மருத்துவமனைக்கு கூறாய்வுக்கு அனுப்பிவைத்தனா்.