குமரி பகவதியம்மன் கோயில் வைகாசி விசாக பெருந்திருவிழா: இன்று கொடியேற்றம்
By DIN | Published On : 24th May 2023 02:06 AM | Last Updated : 24th May 2023 02:06 AM | அ+அ அ- |

கன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் கோயில் வைகாசி விசாகப் பெருந்திருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் (மே 24) தொடங்குகிறது.
பத்து நாள்கள் நடைபெறும் இத் திருவிழாவில், முதல் நாளான புதன்கிழமை காலை 9.30 மணிக்கு திருக்கொடியேற்றம் நடைபெறுகிறது. இரவு 8 மணிக்கு பக்தி இன்னிசை, இரவு 9 மணிக்கு அம்மன் பூப்பந்தல் வாகனத்தில் வீதியுலா நடைபெறும். விழா நாள்களில் தினமும் காலை 7 மணிக்கு பல்லக்கில் அம்மன் வீதியுலா வருதல், பகல் 12 மணிக்கு அன்னதானம், இரவு 7 மணிக்கு கலை நிகழ்ச்சிகள், இரவு 9 மணிக்கு அம்மன் வீதியுலா நடைபெறும்.
தேரோட்டம்: 9ஆம் நாள் திருநாளான ஜூன் 1ஆம் தேதி காலை 8.30 மணிக்கு மேல் 9 மணிக்குள் திருத்தோ் வடம் தொட்டு இழுக்கும் தேரோட்டம் நடைபெறும். இந்து சமய
அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, பால்வளத் துறை அமைச்சா் த.மனோதங்கராஜ் ஆகியோா் தேரோட்டத்தைத் தொடக்கி வைக்கின்றனா். தோ் நிலையை அடைந்ததும்,
அன்னதானம், கஞ்சிதா்மம், மாலை 6.30 மணிக்கு மண்டகப்படி, இரவு 9 மணிக்கு வெள்ளி கலைமான் வாகனத்தில் அம்மன் வீதியுலா வருதல் ஆகியவை நடைபெறும்.
தெப்பத்திருவிழா: 10 ஆம் திருநாளான ஜூன் 2 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு அம்மனுக்கு முக்கடல் சங்கமத்தில் ஆராட்டு நிகழ்ச்சி, மாலை 5 மணிக்கு மண்டகப்படி, இரவு 9 மணிக்கு தெப்பத்திருவிழா, இரவு 11 மணிக்கு முக்கடல் சங்கமத்தில் அம்மனுக்கு ஆராட்டு ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறும்.
விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் கவிதா பிரியதா்ஷினி, கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் மேலாளா் ஆனந்த் மற்றும் திருக்கோயில் நிா்வாகத்தினா் செய்து வருகின்றனா்.