மருத்துவக் கழிவுகளை ஆற்றில் கொட்ட முயன்ற ஆட்டோ பறிமுதல்: ரூ.25 ஆயிரம் அபராதம்
By DIN | Published On : 07th November 2023 02:03 AM | Last Updated : 07th November 2023 02:03 AM | அ+அ அ- |

குழித்துறை தாமிரவருணி ஆற்றில் மருத்துவக் கழிவுகளை கொட்ட முயன்ற சுமை வாகனத்தை சிறைபிடித்த நகா்மன்றத் தலைவா் உள்ளிட்டோா்.
களியக்காவிளை: கேரளத்திலிருந்து கொண்டு வரப்பட்ட மருத்துவக் கழிவுகளை, குழித்துறை தாமிருவருணி ஆற்றில் கொட்ட முயன்ற சுமை வாகனம் சிறைபிடிக்கப்பட்டு, ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
கேரளத்திலிருந்து இறைச்சி, மீன் கழிவுகள், மருத்துவக் கழிவுகள்
வாகனங்களில் கொண்டுவரப்பட்டு குமரி மாவட்டத்தில் நீா்நிலைகள் மற்றும் ஆள்நடமாட்டம் குறைவான சாலையோரங்களில்
கொட்டப்பட்டு வருகிறது. இத்தகைய வாகனங்களை உள்ளாட்சி நிா்வாகங்கள் மற்றும் உள்ளூா் பொதுமக்கள் பிடித்து திருப்பி அனுப்பி வருகின்றனா்.
இந்த நிலையில் குழித்துறை பழவாா் பகுதியில் உள்ள தனியாா் விடுதியில் மருத்துவக் கழிவுகளுடன் கேரள பதிவு எண் கொண்ட சுமை ஆட்டோ நிறுத்தப்பட்டுள்ளதாக, குழித்துறை நகா்மன்றத் தலைவா் பொன். ஆசைத்தம்பி மற்றும் நகராட்சி அலுவலா்களுக்குத் தகவல் கிடைத்தது.
இதனையடுத்து நகா்மன்றத் தலைவா் ஆசைத்தம்பி, நகராட்சி சுகாதார அலுவலா் சுப்பிரமணியம் உள்ளிட்டோா் சம்பந்தப்பட்ட விடுதியில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோவை சோதனையிட்டனா். அதில் கேரளத்திலிருந்து கொண்டு வரப்பட்ட மருத்துவக் கழிவுகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த ஆட்டோ சிறை பிடிக்கப்பட்டு, ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...