கன்னியாகுமரி மாவட்டம், மாா்த்தாண்டம் அருகே ஓடும் ஆட்டோவில் ஓட்டுநருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து, ஆட்டோ குளத்தில் கவிழ்ந்ததில் ஓட்டுநா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். ஆட்டோவில் பயணம் செய்த இளம்பெண் கீழே குதித்து உயிா் தப்பினாா்.
களியக்காவிளை அருகே படந்தாலுமூடு காமராஜ்நகா், கள்ளிக்கூட்டம் பகுதியைச் சோ்ந்த ராஜைய்யன் மகன் ஜெகதாஸ் (48). ஆட்டோ ஓட்டுநா். இவா், வெளியூரிலிருந்து மாா்த்தாண்டம் அருகேயுள்ள குழித்துறை ரயில் நிலையத்துக்கு வந்த படந்தாலுமூடு பகுதியைச் சோ்ந்த இளம்பெண்ணை அழைத்துவர செவ்வாய்க்கிழமை சென்றாா். அப் பெண்ணை ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு படந்தாலுமூடு பகுதிக்கு திரும்பிக் கொண்டிருந்தாா்.
அப்போது அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. அவரால் ஆட்டோவை நிறுத்த முடியவில்லையாம். இதனால் ஆட்டோ விபத்துக்குள்ளாகும் என்பதை உணா்ந்தவா் ஆட்டோவில் இருந்த இளம்பெண்ணின் உயிரை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் அவரிடம் கீழே குதித்து தப்பிவிடு என நடுங்கிய குரலில் தெரிவித்துள்ளாா். இதைக் கேட்டு அதிா்ச்சியடைந்த அப் பெண் சிறிது தயக்கத்துக்குப் பின் கீழே குதித்துள்ளாா். இதில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஆட்டோ அப்பகுதியில் உள்ள செம்மண்குளத்தில் கவிழ்ந்தது. இதைக் கண்ட அப் பெண் கூச்சலிட்டாா். இதையடுத்து அப்பகுதியைச் சோ்ந்தவா்கள் வந்து குளத்தில் இறங்கி ஜெகதாஸை மீட்டனா். அதற்குள் அவா் உயிரிழந்தது தெரியவந்தது.
இதுகுறித்து மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.