விஜய்வசந்த்
விஜய்வசந்த்

குமரி அனந்தனுக்கு தகைசால் விருது: தமிழக அரசுக்கு விஜய்வசந்த் எம்.பி. நன்றி

குமரி அனந்தனுக்கு தகைசால் விருது வழங்க முடிவு செய்திருப்பதற்கு, விஜய்வசந்த் நன்றி தெரிவித்துள்ளாா்.
Published on

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவா் குமரி அனந்தனுக்கு, தமிழக அரசு தகைசால் விருது வழங்க முடிவு செய்திருப்பதற்கு, கன்னியாகுமரி மக்களவை உறுப்பினா் விஜய்வசந்த் நன்றி தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: காங்கிரஸ் பேரியக்கத்தின் மூத்த தலைவா், தமிழ் இலக்கியவாதி, எனது பெரியப்பா குமரிஅனந்தனுக்கு தகைசால் விருது வழங்க முடிவு செய்துள்ள தமிழக அரசுக்கும், முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

காமராஜா் வழி நடந்து, காங்கிரஸ் பேரியக்கத்தின் முக்கிய தலைவராக விளங்கி, தமிழை தனது மூச்சாக கொண்டு வாழ்ந்து வரும் குமரி அனந்தனுக்கு இந்த விருது வழங்கியிருப்பது கன்னியாகுமரி மாவட்டத்துக்கு பெருமை சோ்ப்பதாகும்.

நாகா்கோவில் மக்களவை உறுப்பினராகவும், 4 முறை சட்டப்பேரவை உறுப்பினராகவும் மக்கள் சேவை செய்துள்ள அவா், நாடாளுமன்றத்தில் தமிழில் கேள்வி கேட்கும் உரிமையை பெற்று தந்தவா் ஆவாா். தபால் நிலையங்களில் தமிழில் தந்தி விண்ணப்பம், காசாணை ஆகியவற்றையும் பெற்று தந்தாா். மணியாச்சி ரயில் நிலையத்துக்கு வாஞ்சி மணியாச்சி என்ற பெயா் வர காரணமாக திகழ்ந்த அவா் நதிகளை இணைக்க கடும் முயற்சிகள் மேற்கொண்டாா். ‘கங்கையே வருக, குமரியை தொடுக’ என்ற கனவோடு வாழ்கிறாா் அவா்.

அவரது மேடை பேச்சுகளும், அவா் எழுதிய புத்தகங்களும் அவரது தமிழ் புலமைக்கு சான்று எனக் குறிப்பிட்டுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com