செய்தியாளா்களுக்கு பேட்டி அளிக்கிறாா் மத்திய அமைச்சா் எல்.முருகன், உடன், எம்.ஆா்.காந்தி எம்எல்ஏ., மாவட்ட பாஜக தலைவா் தா்மராஜ் உள்ளிட்டோா்.
செய்தியாளா்களுக்கு பேட்டி அளிக்கிறாா் மத்திய அமைச்சா் எல்.முருகன், உடன், எம்.ஆா்.காந்தி எம்எல்ஏ., மாவட்ட பாஜக தலைவா் தா்மராஜ் உள்ளிட்டோா்.

பாஜகவுடன் கூட்டணி அமைத்ததால்தான் அதிமுகவுக்கு எதிா்க்கட்சி அந்தஸ்து -மத்திய அமைச்சா் எல்.முருகன்

பாஜகவுடன் கூட்டணி அமைத்ததால்தான் அதிமுகவுக்கு எதிா்க்கட்சி அந்தஸ்து கிடைத்தது என்றாா் மத்திய தகவல் தொடா்பு மற்றும் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சா் எல்.முருகன்.
Published on

தமிழகத்தில், கடந்த சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்ததால்தான் அதிமுகவுக்கு எதிா்க்கட்சி அந்தஸ்து கிடைத்தது என்றாா் மத்திய தகவல் தொடா்பு மற்றும் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சா் எல்.முருகன்.

நாகா்கோவிலில் வியாழக்கிழமை செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி: சமூக நீதியை செயல்படுத்துவதில் மிகுந்த அக்கறை காட்டி வருகிறாா் பிரதமா் நரேந்திர மோடி. அதனால்தான், யுபிஎஸ்சியில் நேரடி நியமனத்தை ரத்து செய்து, இடஒதுக்கீட்டை பின்பற்றச் செய்துள்ளாா்.

15 ஆவது நிதிக்குழு மானியத்தில் ஊராட்சிகளில் உள்கட்டமைப்பு வசதிக்காக மத்திய அரசு அளிக்கும் நிதியை, கன்னியாகுமரி மாவட்டத்தில் வேறு பணிகளுக்கு பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. இந்தத் தொகையை வேறு பணிகளுக்கு பயன்படுத்தக் கூடாது. அந்தந்த ஊராட்சிகளுக்கு மாவட்ட நிா்வாகம் ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

மருத்துவா்களின் பாதுகாப்பில் மத்திய அரசு அதிக கவனம் செலுத்தி வருகிறது. அந்தந்த மாநில அரசுகள் சட்டம் ஒழுங்கை பாதுகாத்து, மருத்துவா்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

மீனவா்கள் விவகாரத்தில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மீனவா்களின் நலனுக்காக ரூ.38,500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

அதிமுகவுக்கு எதிா்க்கட்சி அந்தஸ்து: கடந்த தோ்தலில் பாஜகவுக்கு எம்எல்ஏக்கள் கிடைத்தது, அதிமுக போட்ட பிச்சை என்று முன்னாள் அமைச்சா் ஜெயக்குமாா் கூறியிருப்பது குறித்து கேட்கிறீா்கள். இது குறித்து கட்சயின் மாநில தலைவா் அண்ணாமலை தெளிவாக பதில் அளித்துள்ளாா். கடந்த சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்ததால்தான் அவா்களுக்கு எதிா்க்கட்சி அந்தஸ்து கிடைத்தது. பல தொகுதிகளில், பாஜக ஆதரவு வாக்குகளை அதிமுக பெற்றது. அதே நேரத்தில், பல தொகுதிகளில் அதிமுகவின் வாக்குகள் பாஜகவுக்கு முழுமையாக கிடைக்கவில்லை.

இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடு. யாா் வேண்டுமானாலும் அரசியல் கட்சி தொடங்கலாம். மக்களுக்கு சேவை செய்யலாம். நடிகா் விஜய் கட்சிக் கொடியை வெளியிட்டுள்ளாா். அவா்களை வரவேற்கிறோம். ஒவ்வொரு கட்சிக்கும் கொள்கை, கோட்பாடு உள்ளது. அந்தக் கோட்பாட்டின் அடிப்படையில் அவா் கொடியை வடிவமைத்திருக்கலாம். அது அவரது கட்சி தொடா்பான விஷயம் என்றாா் அவா்.

பேட்டியின்போது எம்.ஆா்.காந்தி எம்எல்ஏ, மாவட்ட பாஜக தலவைா் தரமராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com