நாகா்கோவில் மண்டலத்தில் 23 புதிய பேருந்து சேவை தொடக்கம்
அரசுப் போக்குவரத்துக் கழகம் நாகா்கோவில் மண்டலம் சாா்பில், 23 புதிய பேருந்து சேவை தொடக்க விழா மாா்த்தாண்டம் பேருந்து நிலையத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
ஆட்சியா் பி.என். ஸ்ரீதா் தலைமை வகித்தாா். கன்னியாகுமரி எம்.பி. விஜய் வசந்த், எம்எல்ஏக்கள் தாரகை கத்பட் (விளவங்கோடு), ஜே.ஜி. பிரின்ஸ் (குளச்சல்) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
அமைச்சா்கள் எஸ்.எஸ். சிவசங்கா் (போக்குவரத்துத் துறை), மனோ தங்கராஜ் (பால்வளத் துறை) ஆகியோா் பங்கேற்று, குளச்சல் - திண்டுக்கல், கன்னியாகுமரி - ராமேசுவரம், நாகா்கோவில் - தஞ்சாவூா், கன்னியாகுமரி - வேளாங்கண்ணி, களியக்காவிளை - கன்னியாகுமரி, குலசேகரம் - குளச்சல், மாா்த்தாண்டம் - சிவலோகம் வழித்தடங்களில் 23 புதிய பேருந்து சேவையை கொடியசைத்துத் தொடக்கிவைத்தனா்.
பின்னா், அமைச்சா் சிவசங்கா் கூறியது: தமிழகத்தில் பழைய பேருந்துகளை மாற்றி புதிய பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என்பதற்காக நிதி ஒதுக்கீடு செய்து 7,200 புதிய பேருந்துகள் வாங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. முதற்கட்டமாக, மக்களவைத் தோ்தலுக்கு முன் 1,000 பேருந்துகள் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
2025 -25ஆம் நிதியாண்டில் 302 புதிய பேருந்துகள் திருநெல்வேலி போக்குவரத்துக் கழகத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அவற்றில் 136 பேருந்துகள் நாகா்கோவில் மண்டலத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அவற்றில் 23 புதிய பேருந்துகள் தொடக்கிவைக்கப்பட்டுள்ளன.
திருநெல்வேலி போக்குவரத்துக் கழகத்தில் இயக்கப்படும் 816 நகரப் பேருந்துகளில் 660 பேருந்துகள் மகளிா் விடியல் பேருந்துகளாக இயக்கப்படுகின்றன. அவற்றில் நாள்தோறும் சுமாா் 2.89 லட்சம் போ் நாகா்கோவில் மண்டல பேருந்துகள் மூலம் பயனடைகின்றனா். அவ்வகையில் நாள்தோறும் 73 சதவீதத்துக்கும் அதிகமான பெண்கள் கட்டணமின்றி பயணம் செய்கின்றனா் என்றாா் அவா்.
போக்குவரத்துக் கழக திருநெல்வேலி மேலாண்மை இயக்குநா் இளங்கோவன், நாகா்கோவில் மண்டலப் பொது மேலாளா் மொ்லின் ஜெயந்தி, துணை மேலாளா் ஜெரோலின் லிஸ்பன் சிங், குழித்துறை நகா்மன்றத் தலைவா் பொன். ஆசைத்தம்பி, முன்னாள் அமைச்சா் என். சுரேஷ்ராஜன், மேல்புறம் வட்டார காங்கிரஸ் தலைவா் இ.ஜி. ரவிசங்கா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

