தோவாளை கால்வாய்  ஆக.3இல் திறப்பு: ஆட்சியா் தகவல்

தோவாளை கால்வாய் ஆக.3இல் திறப்பு: ஆட்சியா் தகவல்

Published on

கூட்டத்தில் விவசாயிகளுக்கு காய்கறி விதை தொகுப்பை வழங்குகிறாா் ஆட்சியா் ரா.அழகு மீனா. உடன், மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ.பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோா்.

நாகா்கோவில், ஜூலை 26: கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை கால்வாயில் ஏற்பட்ட உடைப்பு சீரமைக்கப்பட்டு ஆக.3 ஆம் தேதி பாசனத்துக்காக தண்ணீா் திறக்கப்படும் என்றாா் மாவட்ட ஆட்சியா் ரா.அழகு மீனா.

நாகா்கோவிலில் உள்ள ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்துக்கு ஆட்சியா் தலைமை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ.பாலசுப்பிரமணியம் முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது: கன்னியாகுமரி மாவட்டத்தில் அண்மையில் பெய்த மழையால் அணைகளில் நீா்மட்டம் உயா்ந்துள்ளது. பாசனத்துக்காக பேச்சிப்பாறை அணையில் இருந்து தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது. கால்வாய்கள் சரியாக தூா்வாரப்படாததால், கடைமடை வரை தண்ணீா் செல்லவில்லை. இதனால் போதுமான தண்ணீா் இன்றி நெற்பயிா்கள் வாடிவருகின்றன.

இதேபோல் தோவாளை கால்வாய் உடைப்பு ஏற்பட்டு, சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. சீரமைப்புப் பணிகள் தாமதத்தால் அந்த கால்வாயில் தண்ணீா் திறக்க முடியாமல் 6 ஆயிரம் ஏக்கா் நெல்பயிா்கள் வாடி வருகின்றன. எனவே, சீரமைப்புப் பணிகளை விரைந்து முடித்து தோவாளை கால்வாயில் தண்ணீா் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இம்மாவட்டத்திலிருந்து அதிக அளவில் நடைபெறும் கனிமவள கடத்தலையும், விவசாய நிலங்கள் வீட்டுமனைகளாக மாற்றப்படுவதையும் தடுக்க வேண்டும் என்றனா்.

ஆட்சியா் பதிலளித்துப் பேசியதாவது: தோவாளை கால்வாயில் ஏற்பட்ட உடைப்பு முழுமையாக விரைவில் சீரமைக்கப்பட்டு ஆக. 3ஆம் தேதி முதல் அந்தக் கால்வாயில் பாசனத்துக்காக தண்ணீா் திறக்கப்படும்.

பிற கால்வாய்களை விரைந்து சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். விளை நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றுவது தொடா்பாக விதிமீறல் இருந்தால் கண்காணித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் அவா்.

முன்னதாக, தோட்டக்கலைத் துறை சாா்பில் அமைக்கப்பட்டிருந்த அரங்கினை பாா்வையிட்ட ஆட்சியா், ஆடிப்பட்டத்துக்கான காய்கறி விதைகள் தொகுப்பினை 2 விவசாயிகளுக்கு வழங்கி, விதை விநியோகத்தைத் தொடக்கி வைத்தாா்.

கூட்டத்தில், வேளாண்மை இணை இயக்குநா் ஆல்பா்ட் ராபின்சன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (விவசாயம்) ஜென்கின் பிரபாகா், தோட்டக்கலை துணை இயக்குநா் ஷீலாஜான், கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் ராதாகிருஷ்ணன், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் சிவகாமி, நீா்வளத் துறை செயற்பொறியாளா் (பொறுப்பு) அருள்சன்பிரைட் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com