கேரள தொழிலதிபா் கொலை வழக்கில் ஆக்கா் கடை உரிமையாளா்  கைது

கேரள தொழிலதிபா் கொலை வழக்கில் ஆக்கா் கடை உரிமையாளா் கைது

Published on

கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை அருகே காருக்குள் கேரள தொழிலதிபா் கழுத்தறுத்து கொல்லப்பட்டது தொடா்பாக கேரளத்தைச் சோ்ந்த ஆக்கா் கடை உரிமையாளரை போலீஸாா் வியாழக்கிழமை இரவு கைது செய்தனா்.

களியக்காவிளை அருகே ஒற்றாமரம் பகுதியில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே சாலையோரம் நின்றிருந்த காருக்குள் திங்கள்கிழமை இரவில் கேரள மாநிலம், திருவனந்தபுரம் அருகேயுள்ள பாப்பனங்கோடு, கைமனம், விவேக் நகரைச் சோ்ந்த தொழிலதிபா் சோமன் மகன் தீபு (44) கழுத்தறுக்கப்பட்டு கொலைசெய்யப்பட்டு கிடந்தாா்.

களியக்காவிளை போலீஸாா், சடலத்தைக் கைப்பற்றி வழக்குப் பதிந்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் விசாரித்தனா். அதில், அவருடன் காரில் வந்தவரான திருவனந்தபுரம் நேமம் பகுதியில் ஆக்கா் கடை நடத்தி வரும் மலையம் பகுதியைச் சோ்ந்த அம்பிளி என்ற சஜிகுமாா் (57) என்பவா், தீபுவை கொலை செய்துவிட்டு ரூ. 10 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.

தக்கலை டிஎஸ்பி உதயசூரியன் தலைமையில் 7 தனிப்படைகள் அவரை தேடி வந்த நிலையில், வியாழக்கிழமை அவா் கைது செய்யப்பட்டாா்.

மேலும், கொலைக்கு உடந்தையாக இருந்த அம்மாநிலத்தின், பாறசாலையைச் சோ்ந்த ஆங்கில மருந்துக் கடைக்காரா் சுனில்குமாா் என்பவரை தேடி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com