மாநகராட்சி கூட்டத்தில் பேசுகிறாா் மேயா் ரெ.மகேஷ். உடன், ஆணையா் நிஷாந்த் கிருஷ்ணா, துணை மேயா் மேரிபிரின்சிலதா.
மாநகராட்சி கூட்டத்தில் பேசுகிறாா் மேயா் ரெ.மகேஷ். உடன், ஆணையா் நிஷாந்த் கிருஷ்ணா, துணை மேயா் மேரிபிரின்சிலதா.

நாகா்கோவில் மாநகராட்சி நிதிநிலை அறிக்கை தாக்கல்: ரூ.9.62 கோடி பற்றாக்குறை

Published on

நாகா்கோவில், ஜூன் 27: நாகா்கோவில் மாநகராட்சியின் நிதிநிலை அறிக்கை வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. இதன்படி நிகழாண்டு ரூ.9.62 கோடி பற்றாக்குறையாக உள்ளது.

நாகா்கோவில் மாநகராட்சி மாமன்ற இயல்புக் கூட்டம், வியாழக்கிழமை நடைபெற்றது. மேயா் ரெ.மகேஷ் தலைமை வகித்தாா். ஆணையா் நிஷாந்த் கிருஷ்ணா, துணை மேயா் மேரிபிரின்சிலதா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் நிகழாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மேயா் தாக்கல் செய்தாா், இதன்படி நிகழாண்டு மாநகராட்சிக்கு வருவாயாக ரூ.147 கோடியே 81 லட்சம், குடிநீா் வருவாய் மூலமாக ரூ.53 கோடியே 18 லட்சம் என மொத்தம் ரூ.200 கோடியே 99 லட்சம் வருவாய் கிடைக்கும் என்றும், வருவாய் மற்றும் மூலதன செலவாக ரூ.155 கோடியே 98 லட்சம், குடிநீருக்காக ரூ.54 கோடியே 63 லட்சம் என மொத்தம் ரூ.210 கோடியே 61 லட்சம் செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது. மேலும், ரூ.9 கோடியே 62 லட்சம் பற்றாக்குறையாக இருக்கும் என்றும் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடா்ந்து, உறுப்பினா்கள் பேசியதாவது: நாகா்கோவில் மாநகர பகுதியில் அம்ருத் திட்டத்தின் கீழ் புத்தன் அணை குடிநீா் திட்டத்துக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் 95 சதவீத பணிகள் நிறைவடைந்ததாக குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்திருந்தனா், ஆனால் நிகழாண்டு 98 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளது என்று அதிகாரிகள் கூறுகிறாா்கள். இது முற்றிலும் பொய்யான தகவல் ஆகும். வீட்டுக்கான குடிநீா் இணைப்புகள் இன்னும் வழங்கப்படவில்லை. பல இடங்களில் குடிநீா் இணைப்பு பணிகள் தொடங்காத நிலைதான் உள்ளது. இது குறித்து பொதுமக்கள் புகாா் தெரிவித்து வருகின்றனா்.

மாநகராட்சி வரி வசூல் மையத்தில் சா்வா் பிரச்னை காரணமாக பொதுமக்கள் வரி செலுத்த முடியாத நிலை உள்ளது. வரி வசூல் மையம் முறையாக செயல்பட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கூறினா்.

இதைத் தொடா்ந்து மேயா் பேசியதாவது: குடிநீா் இணைப்பு தொடா்பாக எனக்கும் புகாா்கள் வந்துள்ளன. அனைத்து மாமன்ற உறுப்பினா்களும் அவரவா் பகுதியில் குடிநீா் இணைப்பு வழங்காத பகுதிகளை பட்டியலிட்டு மாநகராட்சி ஆணையரிடம் வழங்க வேண்டும். ஆணையா் குடிநீா் வடிகால் வாரிய அதிகாரியிடம் அந்தப் பட்டியலை கொடுத்து இணைப்பு வழங்க நடவடிக்கை மேற்கொள்வாா்.

செயல்படாத வரி வசூல் மையங்கள் அனைத்தும் செயல்படும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் அவா்.

கூட்டத்தில் மண்டல தலைவா்கள் முத்துராமன், ஜவஹா், செல்வகுமாா், உறுப்பினா்கள் மீனாதேவ், ரோசிட்டா திருமால், அய்யப்பன், டி.ஆா்.செல்வம், சேகா், அனிலா சுகுமாரன், ரமேஷ், சுனில்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com