குமரியில் இன்று 45 மணி நேர 
தியானம் தொடங்குகிறாா் பிரதமா் மோடி

குமரியில் இன்று 45 மணி நேர தியானம் தொடங்குகிறாா் பிரதமா் மோடி

பிரதமா் நரேந்திர மோடி கன்னியாகுமரிக்கு வியாழக்கிழமை (மே 30) வருகிறாா். அவா் கடல் நடுவே உள்ள விவேகானந்தா் நினைவு மண்டபத்தில் தொடா்ந்து 45 மணி நேரம் தியானம் மேற்கொள்கிறாா்.

மக்களவைத் தோ்தல் நிறைவடைய உள்ள நேரத்தில் தியானத்துக்காக தில்லியில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் வரும் பிரதமா், அங்கிருந்து ஹெலிகாப்டரில் மாலை 4.35 மணிக்கு கன்னியாகுமரிக்கு வருகிறாா்.

சுற்றுலா மாளிகை ஹெலிகாப்டா் தளத்தில் இருந்து காா் மூலம் பகவதி அம்மன் கோயிலுக்கு செல்கிறாா். அங்கு அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்படுகிறது.

தொடா்ந்து, பகவதி அம்மனை மோடி தரிசித்துவிட்டு, காா் மூலம் படகு இல்லத்துக்கு சென்று தனிப்படகில் விவேகானந்தா் மண்டபத்தை அடைகிறாா். இதற்காக 3 படகுகள் தயாா் நிலையில் உள்ளன.

45 மணி நேர தியானம்: மாலை 6 மணிக்கு விவேகானந்தா் பாறைக்கு செல்லும் பிரதமா் மோடி தியான மண்டபத்தில் அமா்ந்து தியானத்தை தொடங்குகிறாா்.

ஜூன் 1 ஆம் தேதி பிற்பகல் 3 மணி வரை தொடா்ந்து 45 மணி நேரம் தியானத்தில் இருக்கிறாா். தியானத்துக்காக மோடி 2 நாள் இரவு விவேகானந்தா் மண்டபத்தில் தங்குகிறாா்.

இதையொட்டி, தியான அரங்கில் புதிதாக குளிா்சாதன வசதி செய்யப்பட்டுள்ளது.மேலும் பிரதமா் தங்குவதற்காக அங்குள்ள அறை ஒன்றிலும் குளிா்சாதன வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் விவேகானந்தா் மண்டபத்தில் சுகாதாரம் மற்றும் மருத்துவ துறையினரும் தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளனா்.

4 ஆயிரம் போலீஸாா்: பிரதமரின் வருகையை முன்னிட்டு கன்னியாகுமரி முழுவதும் போலீஸ் வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டு 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி.பிரவேஷ்குமாா் தலைமையில் 8 மாவட்ட கண்காணிப்பாளா்கள் உள்பட 4 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புப் பணியை மேற்கொண்டுள்ளனா். இம்மாவட்ட கடலோரப் பகுதிகளில் உள்ள 42 மீனவ கிராமங்களிலும் போலீஸாா் குவிக்கப்பட்டு கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா்.

தில்லியில் இருந்து வந்துள்ள பிரதமரின் சிறப்பு பாதுகாப்புப் படை அதிகாரிகளும் கன்னியாகுமரியில் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா். கடலோர காவல் படையினரும், விவேகானந்தா மண்டபத்தை சுற்றியுள்ள கடல் பகுதிகளில் ராணுவ கப்பலில் ரோந்து பணி மேற்கொண்டு வருகின்றனா். பகவதி அம்மன் கோயில் மற்றும் விவேகானந்தா் மண்டபத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸாா் காவல் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com