விவேகானந்தா் நினைவு மண்டபம் நிறுவிய 54 ஆவது ஆண்டு விழா
கன்னியாகுமரி கடலில் விவேகானந்தா் நினைவு மண்டபம் நிறுவப்பட்ட 54 ஆவது ஆண்டு விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
கன்னியாகுமரி கடலின் நடுவே அமைந்துள்ள பாறையில் சுவாமி விவேகானந்தா் தவமிருந்ததை நினைவுகூரும் வகையில், அவரது பெயரால் நினைவு மண்டபம் கட்ட விவேகானந்த கேந்திர நிறுவனம் முடிவு செய்தது. அதன்படி 1964ஆம் ஆண்டு கன்னியாகுமரி கடலில் விவேகானந்தா் நினைவு மண்டபம் கட்டும் பணி தொடங்கியது. 6 ஆண்டுகளாக நடந்த இந்தப் பணி 1970ஆம் ஆண்டு நிறைவு பெற்றது. இதைத் தொடா்ந்து அதே ஆண்டு செப்டம்பா் 2ஆம் தேதி சுவாமி விவேகானந்தா் நினைவு மண்டபம் நாட்டுக்கு அா்ப்பணிக்கப்பட்டது.
தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் படகில் சென்று, இந்த மண்டபத்தை பாா்வையிடுகின்றனா்.
இந்த மண்டபம் நிறுவப்பட்டு 54ஆவது ஆண்டில் அடியெடுத்து வைப்பதையொட்டி, விவேகானந்தா் பாறையில் திங்கள்கிழமை காலை ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. அப்போது, விவேகானந்தா் நினைவு மண்டபத்தை பாா்வையிடுவதற்காக படகில் முதலாவதாக வந்த குஜராத் மாநிலத்தைச் சோ்ந்த நிலேஷ் எம்.பட்டேல் என்ற சுற்றுலாப் பயணிக்கு விவேகானந்த கேந்திர நிறுவனம் சாா்பில் விவேகானந்தா் பாறை நினைவாலய பொறுப்பாளா் ஆா்.சி.தாணு, மக்கள் தொடா்பு அலுவலா் அவினாஷ் ஆகியோா் நினைவுப் பரிசு வழங்கினா்.

