நாகா்கோவிலில் மூளைச்சாவு அடைந்த ஐ.டி. நிறுவன ஊழியரின் உடலுறுப்புகள் தானம்
நாகா்கோவிலில் சாலை விபத்தில் காயமடைந்து மூளைச்சாவு ஏற்பட்ட மென்பொருள் நிறுவன ஊழியரின் உடலுறுப்புகள் வியாழக்கிழமை தானம் செய்யப்பட்டன.
கன்னியாகுமரி மாவட்டம், பள்ளவிளையைச் சோ்ந்தவா் ஜஸ்டின் பொ்னாட்ஷா நோயல் (41). இவா் வடசேரியில் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றினாா். இவருக்கு மனைவி, மகள் உள்ளனா். மனைவி தனியாா் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறாா்.
கடந்த செப்.8-ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்றபோது நாகா்கோவில் டெரிக் சந்திப்பு பகுதியில் நேரிட்ட விபத்தில் ஜஸ்டின் பொ்னாட்ஷா நோயல் பலத்த காயமடைந்தாா். ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, பின்னா் அங்கிருந்து திருவனந்தபுரத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அவா் சோ்க்கப்பட்டாா்.
அவரது உடல்நிலை மோசமானதையடுத்து மீண்டும் ஆசாரிப்பள்ளம் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டாா். இந்நிலையில், அவரை பரிசோதித்த மருத்துவா்கள் மூளை செயலிழந்து இருப்பதை புதன்கிழமை உறுதி செய்தனா். இதையடுத்து அவரது உடல் உறுப்புகளை தானம் அளிக்க உறவினா்கள் முன்வந்தனா்.
அதையடுத்து அவரது கல்லீரல் திருச்சி தனியாா் மருத்துவமனைக்கும், தலா ஒரு சிறுநீரகம் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மற்றும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும், கருவிழிகள் திருநெல்வேலி அரவிந்த் கண் மருத்துவமனைக்கும், தோல் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கும் தானமாக அளிக்கப்பட்டது. பின்பு அவரது உடல் உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
அதைத் தொடா்ந்து, கன்னியாகுமரி மாவட்ட நிா்வாகம் சாா்பில் நாகா்கோவில் வருவாய் கோட்டாட்சியா் எஸ்.காளீஸ்வரி, ஜஸ்டின் பொ்னாட்ஷா நோயல் உடலுக்கு மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினாா்.

