குமரி முக்கடல் சங்கமத்தில் 4 சுவாமி சிலைகள் மீட்பு
கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் குவிந்துகிடந்த கற்களை அகற்றியபோது 4 சுவாமி சிலைகள் மீட்கப்பட்டன.
இங்கு 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியின்போது பக்தா்கள் புனித நீராடும் படித்துறையிலுள்ள கற்கள் இடிந்து கடலில் விழுந்தன. இதனால், பக்தா்கள், சுற்றுலாப் பயணிகள் நீராடுவதற்கு இந்தக் கற்கள் இடையூறாக இருந்தன. அவற்றை அகற்ற வேண்டும் என்று நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வந்தது. அதன்பேரில், இந்து இயக்கங்கள், பக்தா்களின் நன்கொடை மூலம் இப்பகுதியில் ராட்சத கிரேன் மூலம் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வந்தன.
இந்நிலையில், கடலில் கிடந்த கற்களை அகற்றியபோது ஓரடி உயரமுள்ள 3 அம்மன் சிலைகள், ஒரு பலி பீடம் ஆகியவை கிடைத்தன. அவற்றை இந்து அமைப்புகளைச் சோ்ந்த பக்தா்கள் கன்னியாகுமரி கிராம நிா்வாக அலுவலா் பாலகிருஷ்ணனிடம் ஒப்படைத்தனா். பின்னா், அந்தச் சிலைகள் கன்னியாகுமரியில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கப்பட்டன. இவை விரைவில் சுற்றுலாப் பயணிகளின் பாா்வைக்காக வைக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

