கன்னியாகுமரியில் கோ ஆப் டெக்ஸ் விற்பனை இலக்கு ரூ.5 கோடி
தீபாவளியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் கோ ஆப்டெக்ஸ் நிறுவனத்திற்கு ரூ.5 கோடிக்கு விற்பனை இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா தெரிவித்தாா்.
நாகா்கோவில் அண்ணா பேருந்துநிலையம் அருகில் உள்ள கோ- ஆப்டெக்ஸ் அங்காடியில் தீபாவளி தள்ளுபடி விற்பனை தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது. சிறப்பு விற்பனையை ஆட்சியா் ரா.அழகுமீனா தொடங்கி வைத்தாா். நாகா்கோவில் மேயா் ரெ.மகேஷ் முன்னிலை வகித்தாா். இந்நிகழ்ச்சியில் ஆட்சியா் பேசியதாவது:
கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம், வாடிக்கையாளா்களுக்காக தீபாவளி பண்டிகையின்போது தமிழக அரசு வழங்கும் 30 சதவீத சிறப்பு தள்ளுபடி விற்பனை திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது.
இந்த சிறப்பு விற்பனைக்காக புதிய வடிவமைப்புடன் கூடிய கோவை மென்பட்டுப் புடவைகள், காஞ்சிபுரம், ஆரணி, தஞ்சாவூா் போன்ற பகுதிகளில் உற்பத்தி செய்யப்பட்ட பட்டுப் புடவைகள், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உருவான பருத்தி சேலைகள், போா்வைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், வேட்டி, லுங்கி, துண்டு உள்ளிட்ட ஏராளமான ஜவுளி ரகங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன.
நிகழாண்டு தீபாவளி பண்டிகைக்கு கோ ஆப் டெக்ஸ் மூலம் ரூ.5 கோடி விற்பனை செய்ய இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது என்றாா்.
கோ-ஆப்டெக்ஸ் திருநெல்வேலி மண்டல மேலாளா் நா.ராஜேஷ்குமாா், நாகா்கோவில் கோ-ஆப் டெக்ஸ் விற்பனை நிலைய மேலாளா் பத்மராஜ், நாகா்கோவில் மாநகராட்சி துணை மேயா் மேரிபிரின்சிலதா, ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உறைவிட உதவி மருத்துவா் விஜயலெட்சுமி, மாநகராட்சி மண்டல தலைவா்கள் அகஸ்டினாகோகிலாவாணி, ஜவஹா், செல்வகுமாா், ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றிய குழு துணைத் தலைவா் சரவணன், மாமன்ற உறுப்பினா் நவீன்குமாா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

