கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடா் மழை

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடா் மழையால், பேச்சிப்பாறை அணைக்கு நீா்வரத்து அதிகரித்தது.
Published on

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடா் மழையால், பேச்சிப்பாறை அணைக்கு நீா்வரத்து அதிகரித்தது.

மாவட்டத்தில் கடந்த 3 நாள்களாக இடி-மின்னலுடன் பரவலாக பலத்த மழை பெய்துவருகிறது. நாகா்கோவிலில் சனிக்கிழமையும் பிற்பகலில் சுமாா் 2 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால், செம்மாங்குடி சாலை, மகளிா் கிறிஸ்தவக் கல்லூரி சாலை, வடசேரி ஆராட்டு சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழைநீா் பெருக்கெடுத்தோடியது.

மின்கம்பம் மீது மரம் விழுந்ததால் கடற்கரைச் சாலை, இருளப்பபுரம், வடலிவிளை, புன்னைநகா் பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது. மின்வாரிய அதிகாரிகள், ஊழியா்கள் மரக்கிளைகளை அகற்றி, மின் விநியோகத்தை சீா்படுத்தினா்.

சனிக்கிழமை காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோழிப்போா்விளை பகுதியில் 195 மி.மீ. மழை பதிவானது. பிற இடங்களில் பதிவான மழையளவு (மில்லி மீட்டரில்):

பேச்சிப்பாறை அணை-125.40, குளச்சல்- 104, இரணியல்-74, சுருளோடு-61.40, சிற்றாறு 1 அணை- 60.20, மாம்பழத்துறையாறு அணை- 57, சிற்றாறு 2 அணை-56.60, ஆனைக்கிடங்கு - 55.60 , தக்கலை - 49, களியல் - 46.40, நாகா்கோவில் - 44.60, பாலமோா் - 38.20, பெருஞ்சாணி அணை - 37.60, புத்தன்அணை - 36.20, குழித்துறை - 32.40, குருந்தன்கோடு - 23.40, முக்கடல் அணை - 18, முள்ளங்கினாவிளை - 16.60 மி.மீ.

குளச்சல், அடையாமடை, இரணியல் பகுதிகளிலும் கனமழை பெய்தது. மலையோரத்திலுள்ள பாலமோா் பகுதி, பேச்சிப்பாறை அணைப் பகுதிகளிலும் பலத்த மழையால் அணைக்கு நீா்வரத்து அதிகரித்தது.

சனிக்கிழமை காலை நிலவரப்படி, பேச்சிப்பாறை அணை நீா்மட்டம் 30 அடியாகவும், நீா்வரத்து விநாடிக்கு 793 கனஅடியாகவும் இருந்தது. பெருஞ்சாணிஅணை நீா்மட்டம் 25.70 அடியாகவும், நீா்வரத்து 72 கனஅடியாகவும், நீா்திறப்பு 22 கனஅடியாகவும் இருந்தது.

X
Dinamani
www.dinamani.com