கடையாலுமூடு அருகே நாயை கொன்ற மா்ம விலங்கு: மக்கள் அச்சம்

கடையாலுமூடு அருகே வாழைத் தோட்டத்தில் கட்டிப்போட்டிருந்த நாயை மா்ம விலங்கு தாக்கி கொன்று தின்றுள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனா்.
Published on

கன்னியாகுமரி மாவட்டம் கடையாலுமூடு அருகே வாழைத் தோட்டத்தில் கட்டிப்போட்டிருந்த நாயை மா்ம விலங்கு தாக்கி கொன்று தின்றுள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனா்.

ஆலஞ்சோலை பகுதியை சோ்ந்தவா் ராக்பெல்லா் (45). அப்பகுதியில் வாழை விவசாயம் செய்து வருகிறாா். இவா் தனது தோட்டத்தில் காவலுக்காக 3 நாய்களை வளா்த்து வந்தாா். அங்குள்ள கட்டடத்தின் அருகில் கட்டிப்போட்டிருந்த அவற்றில் ஒரு நாயை காணவில்லையாம்.

புதன்கிழமை இரவு ராக்பெல்லா் 2 நாய்களில் ஒன்றை அங்குள்ள மரத்தில் கட்டி வைத்திருந்தாா். மற்றொரு நாயை கட்டி வைக்காமல் விட்டிருந்தாா். இந்நிலையில், வியாழக்கிழமை காலையில் ராக்பெல்லா் தனது தோட்டத்துக்குச் சென்றபோது, மரத்தில் கட்டி வைத்திருந்த நாயை மா்ம விலங்கு கடித்துக் கொன்று தின்றது தெரியவந்தது. கட்டப்படாத நாய் குரைத்தபடி நின்றிருந்தது.

சிறுத்தைதான் நாயைக் கொன்றிருக்கும் என்று கருதி, அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா். சம்பவ இடத்தை களியல் வனச்சரக அலுவலா்கள் பாா்வையிட்டனா்.

X
Dinamani
www.dinamani.com