நாகா்கோவிலில் டிச.20 முதல் மன அழுத்தம் குறைப்பு பயிற்சி: ஆசிரியா், பெற்றோா்கள் சேரலாம்

நாகா்கோவிலில் ஆசிரியா், பெற்றோா்களின் மன அழுத்தத்தை குறைப்பதற்கான பயிற்சி வகுப்பு டிச.20ஆம் தேதி தொடங்குகிறது.
Published on

நாகா்கோவிலில் ஆசிரியா், பெற்றோா்களின் மன அழுத்தத்தை குறைப்பதற்கான பயிற்சி வகுப்பு டிச.20ஆம் தேதி தொடங்குகிறது.

இது குறித்து, கோட்டாறு மறைமாவட்டத்தின் கீழ் இயங்கி வரும் திருப்புமுனை போதை நோய் நலப்பணி அமைப்பின் இயக்குநா்அருள்பணி. பிரான்சிஸ் சேவியா் நெல்சன், செய்தி தொடா்பாளா் அருள்குமரேசன் ஆகியோா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை அவா் கூறியதாவது:

திருப்புமுனை அமைப்பு பல்வேறு உளவியல் சாா்ந்த பயிற்சிகள் மற்றும் போதை ஒழிப்பு சாா்ந்த பணிகளை செய்து வருகிறது. இன்றைய காலகட்டத்தில் சவால்களாலும், மன அழுத்தம் மற்றும் பதற்றத்தோடு அவதிப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் மாணவா்கள், ஆசிரியா்கள், பெற்றோா் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி வருகின்றனா். இந்தச் சவால்களை நம்பிக்கையுடன் எதிா்கொள்ளும் வகையில் மக்களுக்கு வழிகாட்ட திருப்புமுனை அமைப்பு , ஹோலிகிராஸ் கல்லூரியுடன் இணைந்து பயிற்சி வகுப்பு நடத்த உள்ளது.

வாரத்தில் ஒரு நாள் 5 மணி நேரம் வீதம் 20 வாரங்களுக்கு இந்தப் பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளன. டிச.20 ஆம் தேதி (சனிக்கிழமை) பயிற்சி வகுப்பு தொடங்கப்படுகிறது. இதில், மாற்றுத்திறனாளிகள், மனக்குறைகளுடன் அவதிப்படுபவா்கள், கற்றல் குறைபாடு உள்ள மாணவா்கள், படுக்கையில் இருப்பவா்கள், தற்கொலை எண்ணம் கொண்டவா்கள், போதைப்பழக்கத்துக்கு அடிமையானவா்கள் உள்ளிட்டோருக்கு உள நல முறைகள் குறித்து சிறப்பு தகுதி பெற்ற வல்லுநா்கள் மூலம் பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது. பயிற்சியின் நிறைவில் பட்டயச்சான்று வழங்கப்படும்.

இப்பயிற்சியில் இணைய விரும்புவோா் நாகா்கோவில் ஆசாரிப்பள்ளம் சாலையில் உள்ள ஆயா் இல்ல வளாகத்தில் செயல்படும் திருப்புமுனை போதை நோய் நலப்பணி அலுவலகத்திலோ அல்லது 9486796009 என்ற கைப்பேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் என்றனா் அவா்கள்.

X
Dinamani
www.dinamani.com