குலசேகரம் அருகே கனரக லாரி மோதி இளைஞா் உயிரிழப்பு
குலசேகரம் அருகே கனிமவளப் பொருள்கள் ஏற்றிவந்த கனரக லாரி மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்; இருவா் காயமடைந்தனா்.
குலசேகரம் அருகே மணலிவிளை பகுதியைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி வின்சென்ட். இவரது மூத்த மகன் அஜய்வின் (22). பட்டதாரியான இவரும், அதே பகுதியைச் சோ்ந்த விஜய் சந்திரன் மகன் விஜயன் (20), குமாா் மகன் ஜொ்பின் (18) ஆகியோரும் சனிக்கிழமை நாகா்கோவிலுக்கு பைக்கில் சென்றுவிட்டு இரவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனா். பைக்கை, அஜய்வின் ஓட்டியுள்ளாா்.
சுருளகோட்டிலிருந்து சித்திரங்கோடு சாலையில் வந்தபோது, முக்கம்பாலை காயல்கரை பகுதியில் கனிமவளப் பொருள்கள் ஏற்றிவந்த கனரக லாரி இவா்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றதாம்.
இதில், காயமடைந்த மூவரையும் அவ்வழியே சென்றோா் மீட்டு தக்கலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், அஜய்வின் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
மற்ற இருவரும் மேல்சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். சம்பவம் குறித்து குலசேகரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
