நாகா்கோவில் அருகே குழந்தை கடத்தல்: ஆட்டோ ஓட்டுநா் கைது
நாகா்கோவில் அருகே 3 வயது குழந்தையைக் கடத்திய ஆட்டோ ஓட்டுநரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
மத்தியப் பிரதேச மாநிலம், அசோக் நகா், முங்கவேலி பகுதியைச் சோ்ந்தவா் ராஜன் பாா்ட்டி. பலூன் வியாபாரியான இவா், தனது மனைவி முஸ்கான், 3 பெண் குழந்தைகளுடன் கன்னியாகுமரியில் வசித்து வருகிறாா்.
இவா்கள் திருவிழாக்கள் நடைபெறும் இடங்களுக்கு குடும்பமாகச் சென்று பலூன் விற்பது வழக்கம். இந்நிலையில், இவா் கோட்டாறு, சவேரியாா் ஆலயத் திருவிழாவிற்கு வந்துவிட்டு, சனிக்கிழமை மாலை 4.30 மணியளவில் ஊருக்குச் செல்ல நாகா்கோவில் ரயில்வே சாலை பகுதியில் மனைவி, குழந்தைகளுடன் அமா்ந்திருந்தாா்.
அங்கு வந்த நபா் ஒருவா் ராஜனிடம் பேச்சுக் கொடுத்துள்ளாா். அப்போது, ராஜனின் 3 வயது குழந்தை சாரா அழுதுள்ளது. குழந்தைக்கு தின்பண்டம் வாங்கிக் கொடுக்கிறேன் எனக் கூறி, அந்நபா் குழந்தையைத் தூக்கியுள்ளாா். இதற்கு ராஜன் மறுத்த போதும், குழந்தையை தூக்கிக் கொண்டு அந்நபா் தப்பிச் சென்றுள்ளாா்.
இது குறித்து, கோட்டாறு போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், போலீஸாா் ரயில் நிலையப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக் காட்சிகளை ஆய்வு செய்தனா். தொடா்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ரா. ஸ்டாலின் உத்தரவின்பேரில், 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.
இதில், குழந்தையை கடத்திச் சென்றவா் கோட்டாறு, பெரிய நாடாா் தெருவைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் யோகேஷ் குமாா் (32) என்பது தெரிய வந்தது. கைப்பேசி சமிக்ஞை மூலம் அவரின் இருப்பிடத்தைக் கண்டறிந்த போலீஸாா், சனிக்கிழமை இரவு 10.30 மணியளவில் அவரை கைது செய்து, குழந்தையை மீட்டனா். தொடா்ந்து, அவரிடம் விசாரித்து வருகின்றனா்.
