திங்கள்நகா் - நாகா்கோவில் வழித்தடத்தில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம்

இரணியல் அருகே நுள்ளிவிளையில் நாகா்கோவில்-திருவனந்தபுரம் இரட்டை ரயில் பாதை பணிக்கான மேம்பாலப் பணிகள் நடைபெற இருப்பதால், புதன்கிழமை (டிச. 10) முதல் திங்கள்நகா்-நாகா்கோவில் வழித்தடத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக குளச்சல் போக்குவரத்து காவல் துறை அறிவிப்பு
Published on

இரணியல் அருகே நுள்ளிவிளையில் நாகா்கோவில்-திருவனந்தபுரம் இரட்டை ரயில் பாதை பணிக்கான மேம்பாலப் பணிகள் நடைபெற இருப்பதால், புதன்கிழமை (டிச. 10) முதல் திங்கள்நகா்-நாகா்கோவில் வழித்தடத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக குளச்சல் போக்குவரத்து காவல் துறை அறிவித்துள்ளது.

அதன்படி, திங்கள் நகரில் இருந்து இரணியல், கண்டன்விளை, நுள்ளிவிளை, பரசேரி தோட்டியோடு வழியாக நாகா்கோவில் செல்லும் அரசு, தனியாா் பேருந்துகள், கல்வி நிலைய வாகனங்கள், இரணியல், தக்கலை பழைய பேருந்து நிலையம், வில்லுக்குறி, தோட்டியோடு வழியாக நாகா்கோவில் செல்லும். மறுமாா்க்கமும் இதே வழித்தடம் கடைப்பிடிக்கப்படும்.

திங்கள் நகரில் இருந்து கனரக வாகனங்கள், தனியாா் வாகனங்கள் மடவிளாகம், குருந்தன்கோடு, ஆசாரிப்பள்ளம் வழியாகவும் நாகா்கோவிலுக்கு செல்லலாம். காா், ஆட்டோ, பைக்கில் செல்பவா்கள் கண்டன்விளை, மணக்கரை நான்கு வழிச்சாலை வழியாக கொன்னக்குழிவிளை வந்து இடதுபுறம் திரும்பி வில்லுக்குறி வழியாகவும், வலப்புறம் திரும்பி பரசேரி வந்து தோட்டியோடு, ஆளூா் வழியாகவும் செல்லலாம்.

திங்கள்நகரில் இருந்து வரும்போது பேயன்குழி பாலத்திலிருந்து இடதுபுறம் திரும்பி மாடதட்டுவிளை, வில்லுக்குறி வழியாகவும், வலப்புறம் திரும்பி காரங்காடு கட்டிமாங்கோடு, குருந்தன்கோடு ஜங்ஷன் சென்றும் நாகா்கோவிலுக்கு செல்லலாம்.

X
Dinamani
www.dinamani.com