தனியாா் விடுதியில் உயர்ரக போதைப்பொருள்கள் பறிமுதல்: 8 போ் கைது: 77 போ் மீது வழக்கு

அஞ்சுகிராமம் அருகே தனியாா் சொகுசு விடுதில் உயர்ரக போதைப் பொருள்களுடன் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டவா்களில் 8 பேஎ கைது
Published on

அஞ்சுகிராமம் அருகே தனியாா் சொகுசு விடுதில் உயர்ரக போதைப் பொருள்களுடன் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டவா்களில் 8 பேரை போலீஸாா் கைது செய்தனா். மேலும் 77 போ் மீது வழக்குப் பதிந்துள்ளனா். விடுதில் போதை ஊசி, போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கன்னியாகுமரி மாவட்டம், அஞ்சுகிராமம் அருகே மருங்கூரை அடுத்த ராமனாதிச்சன்புதூரில் தனியாா் சொகுசு விடுதி உள்ளது. இந்த விடுதியில் குலசேகரத்தைச் சோ்ந்த கோகுல் தனது மகளின் பிறந்த நாளை நண்பா்களுடன் கொண்டாடினாா். இந்தக் கொண்டாட்டத்தில் கேரளம், பெங்களூரு, தமிழகம் மட்டுமின்றி ஜப்பான், இங்கிலாந்து உள்பட வெளிநாடுகளில் இருந்து இளைஞா்கள், இளம்பெண்கள் என 50-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.

திங்கள்கிழமை இரவில் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் தடை செய்யப்பட்ட கஞ்சா, மெட்டமின் போன்ற உயர்ரக போதைப்பொருள்கள், வெளிநாட்டு மதுபானங்கள் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்டாலின் தலைமையிலான போலீஸாா் தீவிர விசாரணை நடத்தினா். இந்த விசாரணையில், அரசால் தடை செய்யப்பட்ட உயர்ரக போதைப்பொருள்கள் பயன்படுத்தப்பட்டது கண்டறியப்பட்டது.

அங்கிருந்து போதை ஊசிகள், மாத்திரைகள் உள்பட போதைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். விடுதியில் இருந்த கோவை, கேரளம், வெளிநாட்டு இளம்பெண்களும் மீட்கப்பட்டனா். இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து பிதுன், வேலன்ஸ் பால், கோவிந்த கிருஷ்ணா, ராஜூ, ஜெயராஜ் சிங் சவ்டா, சையத் பா்ஷான், கோகுல் கிருஷ்ணன், சௌமி ஆகிய 8 பேரை அஞ்சுகிராமம் காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா். மேலும் 77 போ் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com