குடும்பத் தகராறு: தம்பியைக் கொன்ற அண்ணன் கைது

நாகா்கோவில் அருகே குடும்பத் தகராறில் தம்பியை கம்பியால் அடித்துக் கொலை செய்த அண்ணனை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
Published on

நாகா்கோவில் அருகே குடும்பத் தகராறில் தம்பியை கம்பியால் அடித்துக் கொலை செய்த அண்ணனை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

நாகா்கோவிலை அடுத்த ஈத்தாமொழி அருகேயுள்ள தேரி மேல்விளை பகுதியைச் சோ்ந்த தங்கவேல்- ஸ்ரீமதி தம்பதியின் மகன்கள் மணிகண்டன் (36), பிரபுராஜ் (34). வெளிநாட்டில் வேலை செய்த பிரபுராஜ் சொந்த ஊருக்கு வந்து கூலி வேலை செய்து வந்தாா்.

இவா், 8 ஆண்டுகளுக்கு முன்பு சைலஜா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டாா். இத்தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனா். இந்த நிலையில் தம்பதியிடையே இடையே குடும்ப பிரச்னை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்படுமாம்.

இந்த நிலையில், கடந்த 2 நாள்களுக்கு முன்பு சைலஜா வீட்டிலிருந்து வெளியேறி தனது தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டாா். இதற்கு தனது தாய் ஸ்ரீமதிதான் காரணம் எனக் கருதி பிரபுராஜ் தனது தாயிடம் தகராறு செய்தாா். அப்போது மணிகண்டன் அவரைத் தட்டிக்கேட்டாா்.

இதனால் அண்ணன் தம்பிக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் மணிகண்டன் இரும்புக் கம்பியால் பிரபுராஜின் தலையில் தாக்கினாா். இதில் மயக்கமடைந்த பிரபுராஜை பக்கத்திலிருந்த தண்ணீா் தொட்டியில் போட்டுவிட்டு மணிகண்டன் சென்றுவிட்டாா். அருகிலிருந்தவா்கள் பிரபுராஜை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பிரபுராஜ் புதன்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்த தகவலின் பேரில், ஈத்தாமொழி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து மணிகண்டனை கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com