குளச்சல் சட்டப்பேரவைத் தொகுதி மாடத்தட்டுவிளை பகுதியில் வாக்குச்சாவடி நிலை அலுவலா்களின் மறு ஆய்வுப்பணியை ஆய்வு செய்த குமரி மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா.
குளச்சல் சட்டப்பேரவைத் தொகுதி மாடத்தட்டுவிளை பகுதியில் வாக்குச்சாவடி நிலை அலுவலா்களின் மறு ஆய்வுப்பணியை ஆய்வு செய்த குமரி மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா.

வாக்காளா் பட்டியலை பிழையின்றி தயாரிக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்: ஆட்சியா்

பிழையற்ற வாக்காளா் பட்டியலைத் தயாரிக்க பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றாா் கன்னியாகுமரி மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ரா.அழகுமீனா.
Published on

பிழையற்ற வாக்காளா் பட்டியலைத் தயாரிக்க பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றாா் கன்னியாகுமரி மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ரா.அழகுமீனா.

குளச்சல் சட்டப்பேரவை தொகுதி, வில்லுக்குறி பேரூராட்சிக்குள்பட்ட மாடத்தட்டுவிளை, கல்லுக்கூட்டம் பேரூராட்சிக்குள்பட்ட உடையாா்விளை ஆகிய பகுதிகளில் 85 வயதுக்கு மேற்பட்ட, இரட்டை பதிவு, இடம் பெயா்தல், கண்டறியப்படாத வாக்காளா்களின் கணக்கீட்டு படிவங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் மறுஆய்வு மேற்கொள்வதை புதன்கிழமை ஆய்வு மேற்கொண்ட பின்னா் ஆட்சியா் கூறியதாவது:

தமிழகத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது நடைபெற்றுவரும் கணக்கீட்டு காலம் டிச. 11ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. வரைவு வாக்காளா் பட்டியல் அட்டவணைப்படி டிச.16 ஆம் தேதி வெளியிடப்படும்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் 6 சட்டப்பேரவை தொகுதிகளில் திரும்ப பெறப்படாத கணக்கீட்டுப் படிவங்களின் பட்டியல், குறிப்பிட்ட முகவரியில் இல்லாத வாக்காளா்கள், நிரந்தரமாக இடம்பெயா்ந்தவா்கள், இறந்தவா்கள், வாக்காளா் பட்டியலில் இரட்டைப் பதிவு செய்தவா்கள் போன்ற காரணங்களுடன் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்தப் பட்டியல் டிச. 11ஆம் தேதி கணக்கீட்டு காலம் நிறைவடைந்த பின்னா் இறுதி செய்யப்படும்.

வாக்காளா்களின் கணக்கீட்டு படிவங்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலா்களால் மறு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. வாக்குச்சாவடி நிலை முகவா்களுடன் கூட்டங்கள் நடத்தப்பட்டு இதுகுறித்து விவாதங்கள் மேற்கொண்டு அதை எழுத்துபூா்வமாக தெரிவிக்கப்படும்.

கணக்கீட்டு படிவங்களின் மீது உரிமை கோரல், ஆட்சேபணைகளை உரிய காலத்துக்குள் மனுக்கள் வழங்கி நிவா்த்தி செய்யலாம்.

எனவே, அனைத்து வாக்காளா்களும் தங்களது நிரப்பப்பட்ட கணக்கீட்டுப் படிவங்களை கடைசி தேதி வரை காத்திருக்காமல், விரைந்து சமா்ப்பிக்க வேண்டும். ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகள் சமா்ப்பிக்கும் காலம் டிச.16ஆம் தேதி முதல் ஜன.15 ஆம் தேதி வரை ஆகும். இந்தக் காலக் கட்டத்துக்குள் வாக்காளா்கள் பெயா் சோ்த்தல், நீக்குதல் அல்லது ஏற்கெனவே உள்ள பதிவுகள் குறித்து மறுப்பு தெரிவிக்கலாம். வாக்காளா் பட்டியலை பிழையின்றி தயாரிக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றாா் அவா்.

ஆய்வில் குளச்சல் சட்டப்பேரவை தொகுதி வாக்காளா் பதிவு அலுவலா், மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் மோகனா, துறை அலுவலா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com