வேளிமலை முருகன் கோயிலில் பாரம்பரிய காவடி திருவிழா
நாட்டில் குற்றங்கள் குறைந்து, விவசாயம் செழிக்க வேண்டி காவல் துறை மற்றும் பொதுப்பணித் துறை பணியாளா்கள் வேளிமலை குமாரகோவில் முருகன் கோயிலுக்கு காவடி எடுக்கும் பாரம்பரிய காவடி திருவிழா தக்கலையில் வெள்ளிக்கிழமை நடந்தது.
கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கூா் சமஸ்தான ஆட்சி காலத்தில் இருந்தே தொன்றுதொட்டி நடைபெறும் இத்திருவிழாவை முன்னிட்டி, தக்கலை காவல் நிலையத்தில் பூஜை வழிபாடுகள் நடத்தி, அங்கிருந்து போலீஸாா் 2 புஷ்ப காவடிகள் எடுத்தனா்.
தொடா்ந்து, யானை மீது பால்குடம் பவனியும் நடைபெற்றது. இந்நிகழ்வில், பத்மநாபபுரம் ஒருங்கிணைந்த நீதிபதிகள் ராமச்சந்திரன், மாரியப்பன், சுந்தரி, காா்த்திக், டிஎஸ்பி பாா்த்திபன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடா்ந்து மழை பொழிந்து நீா்வளம் பெருகி விவசாயம் செழிக்க பொதுப்பணித் துறை பணியாளா்கள் புஷ்ப காவடி எடுத்து வழிபாடு செய்தனா். இந்நிகழ்வில், தலைமைப் பொறியாளா் ரமேஷ், உதவிச் செயற்பொறியாளா் அருள்சன் பிரைட், உதவிப் பொறியாளா்கள் கதிரவன், வினிஷா உள்பட பலா் கலந்து கொண்டனா்.
மேலும் தென்கரை, வழிக்கலம்பாடு, குலசேகரம், திருவெட்டாறு, பரசேரி, வில்லுக்குறி, பாலப்பள்ளி, புலியூா்குறிச்சி உள்ளிட்ட சுற்றுவட்டார ஊா்களில் இருந்து விவசாயிகள், பொதுமக்கள் சாா்பில், புஷ்ப காவடி, பால் காவடி, வேல் காவடி, சூரிய காவடி, பறக்கும் காவடி, மயில் காவடி, தொட்டில் காவடி போன்ற காவடிகள் எடுத்து குமாரகோவில் வேளிமலை முருகன் கோயிலக்குச் சென்று சுவாமியை வழிபட்டனா்.
தக்கலை முதல் குமாரகோவில் வரை விவசாயிகள் தாங்கள் விளைவித்த, பல்வேறு வகை வாழைக்குலைகளை கட்டி காவடிக்கு வரவேற்பு கொடுத்தனா்.

