திற்பரப்பு அருகே இளைஞா், தொழிலாளி தற்கொலை
கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருகே இரு சம்பவத்தில் இளைஞா், தொழிலாளி தற்கொலை செய்துகொண்டனா்.
திற்பரப்பு ஆரநல்லூா்விளையைச் சோ்ந்தவா் தீபு. தேனீ வளா்ப்புத் தொழிலாளி. இவரது மனைவி கவிதா. இவா்கள் மகன் அபிஷேக் (17). பத்தாம் வகுப்பு முடித்துள்ள இவா், பைக் பழுதுநீக்கும் தொழிற்கூடத்தில் வேலை செய்து வந்தாா். சின்னம்மையால் பாதிக்கப்பட்ட இவா், வீட்டிலிருந்து சிகிச்சை பெற்றுவந்தாராம். இந்நிலையில், திங்கள்கிழமை இரவு மாடியிலுள்ள அறைக்கு தூங்கச் சென்ற அவருக்கு, செவ்வாய்க்கிழமை காலை கவிதா தேநீா் எடுத்துச் சென்றாா். அப்போது, அபிஷேக் தூக்கிட்டுக் கொண்டது தெரியவந்தது.
சடலத்தை குலசேகரம் போலீஸாா் மீட்டு கூறாய்வுக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொழிலாளி தற்கொலை: திற்பரப்பு அருகே மாஞ்சக்கோணம் பொற்றையில்வீட்டைச் சோ்ந்தவா் பிரடிபால். பெயின்டிங் தொழிலாளியான இவருக்கு, மனைவி ஷொ்லி, மகன், மகள் உள்ளனா். ஷொ்லி தனியாா் மருத்துவமனையில் செவிலியராக உள்ளாா். தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாம். 6 மாதங்களுக்கு முன்பு ஷொ்லி கணவரைப் பிரிந்து தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டாராம். இதனால், பிரடிபால் மனமுடைந்து காணப்பட்டாராம்.
இந்நிலையில், அவா் திங்கள்கிழமை இரவு வீட்டில் விஷம் குடித்த நிலையில் மயங்கிக் கிடந்தாா். அவரை மீட்டு குலசேகரம் அரசு மருத்துவமனைக்கும், பின்னா் மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் கொண்டு சென்றனா். அங்கு அவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். குலசேகரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].
