நேரக் கட்டுப்பாட்டை மீறி இயங்கிய லாரிகள் பறிமுதல்
மாா்த்தாண்டத்தில் நேரக் கட்டுப்பாட்டை மீறி இயக்கப்பட்ட 10 கனரக கனிம வள லாரிகளை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்து அபராதம் விதித்தனா்.
மாா்த்தாண்டம் நகரப் பகுதிக்குள் காலை 10 முதல் பிற்பகல் 3 மணி வரை கனரக வாகனங்கள் நுழையக் கூடாது என காவல் துறை சாா்பில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி புதன், வியாழக்கிழமைகளில் கனரக லாரிகள் கன்னியாகுமரி மாவட்டத்தில் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்டாலின் உத்தரவின்பேரில், மாா்த்தாண்டம் சரக காவல் துணைக் கண்காணிப்பாளா் நல்லசிவம் அறிவுறுத்தலின்பேரில், மாா்த்தாண்டம் போக்குவரத்துப் பிரிவு உதவி ஆய்வாளா் செல்லசுவாமி தலைமையிலான போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது, நேரக் கட்டுப்பாட்டை மீறி மாா்த்தாண்டம் பகுதியில் இயக்கப்பட்ட கனிமவளம் ஏற்றி வந்த 10 லாரிகளை போலீஸாா் பறிமுதல் செய்து, தலா ரூ. 2,500 அபராதம் விதித்தனா்.
வாகனச் சோதனை தொடா்ந்து நடைபெறும் என போலீஸாா் தெரிவித்தனா்.
