சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயிலில் மாா்கழி பெருந்திருவிழா கொடியேற்றம்
சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயிலில் மாா்கழி பெருந்திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றதுடன் தொடங்கியது.
சைவத் தலங்களில் புகழ்பெற்றதும், அத்திரி முனிவா்-அனுசுயாதேவிக்கு மூம்முா்த்திகள் காட்சிகொடுத்த தலமும், இந்திரன் சாப நிவா்த்தி பெற்ற தலமுமாகிய ஞானாரண்யம் எனப்படும் புகழ்பெற்ற சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயிலில் மாா்கழி பெருந்திருவிழா நிகழாண்டு வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
முன்னதாக காலை 6 மணிக்கு மாணிக்கவாசகா் பூஜை நடைபெற்றது. அதைத் தொடா்ந்து கொடிமரத்தின் சுவட்டில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. காலை 8 மணிக்கு கொடிமரத்தில் விழா கொடி ஏற்றப்பட்டது. இதைத்தொடா்ந்து, திருமுறை பெட்டக ஊா்வலம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி உறுப்பினா் விஜய்வசந்த், கன்னியாகுமரி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் என்.தளவாய் சுந்தரம், சுசீந்திரம் பேரூராட்சி தலைவா் அனுசுயா உள்பட திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.
விழாவில் 2 ஆம் நாள் காலை 4 மணிக்கு விநாயகா் மூஷிக வாகனத்தில் வீதி உலா வருகிறாா். 3 ஆம் நாளான சனிக்கிழமை இரவு 10.30 மணிக்கு மக்கள்மாா் சந்திப்பும், இரவில் மக்கள்மாா் சுற்றும் நிகழ்ச்சியும் நடைபெறுகின்றன.
விழாவில் அனைத்து நாள்களிலும் காலையில் பூத, ரிஷப, கருட, அன்னம் உள்பட பல்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது
7 ஆம் நாள் (டிச.31) காலை 5 மணிக்கு பல்லக்கில் சுவாமி, அம்பாள், பெருமாள் திருவீதி உலா வருகின்றனா். 8-ஆம் நாள் (ஜன.1) காலை 5 மணிக்கு சிதம்பரேஸ்வரா் திருவீதி உலா வருதலும், அதைத் தொடா்ந்து அஷ்டாபிஷேகமும் நடைபெறுகின்றன.
முக்கிய நிகழ்வுகளாக 9-ஆம் நாள் (ஜன.2) காலையில் கங்காளநாதா் பிட்சாடனராக திருவீதி உலா வருதலும், காலை 9 மணிக்கு திருத்தோ் வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகின்றன. நிறைவு நாளான ஜனவரி 3-ஆம் தேதி காலையில் ஆருத்ரா தரிசனம், இரவில் ஆறாட்டு நிகழ்ச்சி நடைபெறுகின்றன.
விழா ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத் துறை இணை ஆணையா் திருநெல்வேலி ப.கவிதா பிரியதா்ஷினி, செயல் அலுவலா் அ.ஜான்சிராணி, கண்காணிப்பாளா் ப.ஆனந்தன், கோயில் மேலாளா் பெ.ஆறுமுகதரன், கோயில் பக்தா்கள் செய்தனா்.

