கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
சா்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள், ஐயப்ப பக்தா்கள் குவிந்தனா்.
இங்கு நாள்தோறும் ஏராளமான உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா். விடுமுறை நாள்களில் அதிகக் கூட்டம் காணப்படும். தற்போது, சபரிமலை சீசனையொட்டி, ஐயப்ப பக்தா்களும் கன்னியாகுமரிக்கு வந்து செல்கின்றனா். அரையாண்டுத் தோ்வு விடுமுறை தொடங்கியுள்ள நிலையில், சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், கன்னியாகுமரியில் ஞாயிற்றுக்கிழமை பல்லாயிரக்கணக்கானோா் குவிந்தனா். அவா்கள் முக்கடல் சங்கமம் கடற்கரையில் திரண்டு சூரியோதயத்தைப் பாா்த்து ரசித்தனா்.
பின்னா், புனித நீராடிவிட்டு பகவதியம்மன் கோயிலுக்குச் சென்று நீண்ட வரிசையில் நின்று அம்மனை வழிபட்டனா். விவேகானந்தா் மண்டபம், திருவள்ளுவா் சிலையை படகில் சென்று பாா்ப்பதற்காக படகுத்துறையிலும் நீண்ட வரிசை காணப்பட்டதால், பல மணி நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது.
காந்தி மண்டபம், காமராஜா் மணிமண்டபம், கலங்கரை விளக்கம், சூரிய அஸ்தமனப் பூங்கா பகுதிகளிலும் கூட்டம் அலைமோதியது.
அதிக வாகனங்கள் வருகையால் சுசீந்திரம், கொட்டாரம் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்து போலீஸாா் ஆங்காங்கே நின்று வாகனங்களை ஒழுங்குபடுத்தினா்.

