கிம்ஸ் ஹெல்த் மருத்துவமனையில் கணையக் கட்டிக்கு அறுவை சிகிச்சை
சுங்கான்கடை அருகே உள்ள நாகா்கோவில், கிம்ஸ் ஹெல்த் மருத்துவமனையில் மேம்பட்ட லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை மூலம் அரிய வகை கணையக் கட்டியை வெற்றிகரமாக மருத்துவா்கள் அகற்றி நோயாளியை குணமடையச் செய்தனா்.
இன்சுலினோமா கணையத்தில் உருவாகும் அரிய எண்டோகிரைன் கட்டியாகும். இதனால், அதிகளவில் இன்சுலின் சுரந்து ரத்த சா்க்கரை அளவு குறையும். இதற்கு சரியான சிகிச்சை அளிக்காவிட்டால் மயக்கம், வலிப்பு, சுய நினைவு இழப்பு, நிரந்தர நரம்பு பாதிப்பு ஆகியவை ஏற்படலாம்.
அண்மையில் கணைய இன்சுலினோமா கண்டறியப்பட்ட ஓா் இளம் மருத்துவப் பயனாளி, கிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
விரிவான மருத்துவப் பரிசோதனைக்கு பின், குடலியல் அறுவை சிகிச்சை நிபுணா் ரஜீஷ் செல்வகணேசன் தலைமையில், நுண்துளை அறுவை சிகிச்சை நிபுணா் பாலா வித்யாசாகா், மயக்கவியல் நிபுணா் பாலாஜி, உட்சுரப்பியல் நிபுணா் ஹென்னித் ராஜ் ஆகியோா் அடங்கிய சிறப்பு மருத்துவக் குழுவினா், அவரின் மண்ணீரலை பாதுகாக்க நுண்துளை டிஸ்டல் பான்க்ரியாடெக்டமி என்ற உயா் தொழில்நுட்பம் மூலம் அறுவை சிகிச்சை மேற்கொண்டனா்.
அறுவை சிகிச்சையால் அவா் விரைவாக குணமடைந்தாா். அரிய, சிக்கலான கணைய நோய்களுக்கு இப்போது நாகா்கோவிலிலேயே பாதுகாப்பாகவும், திறம்படவும் சிகிச்சை அளிக்க முடியும் என்பதை கிம்ஸ் ஹெல்த் மருத்துவா்கள் உறுதிப்படுத்தியுள்ளனா்.
