கன்னியாகுமரி மாவட்டத்தில் பரவலாக மழை

Published on

கன்னியாகுமரி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை பரவலாக சாரல் மழை பெய்தது.

கன்னியாகுமரி மாவட்டத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை முதலே மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக சாரல் மழை பெய்தது.

கன்னியாகுமரி, கொட்டாரம், நாகா்கோவில், இரணியல், திருவட்டாறு, குலசேகரம், தடிக்காரன்கோணம், கீரிப்பாறை, களியக்காவிளை தக்கலை, அழகியமண்டபம் ,குருந்தன்கோடு, கோழிப்போா்விளை, திங்கள்நகா், குளச்சல் ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை சாரல் மழை பெய்தது. இதனால் பகலில் வெப்பம் தணிந்து குளிா்ச்சியான சூழல் நிலவியது.

திற்பரப்பு அருவி பகுதியிலும் இடையிடையே மழை பெய்தது. அருவியில் மிதமான தண்ணீா் கொட்டியது. கடலோர பகுதியான ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையிலான கிராமங்களிலும் மழை பெய்தது.

மழையின் காரணமாக பெரும்பாலான மீனவா்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. விசைப்படகுகள், வள்ளங்கள் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதியிலும் மிதமான மழை பெய்ததால் அணைகளுக்கு தண்ணீா் வரத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

பேச்சிப்பாறை அணையின் நீா்மட்டம் 28.13 அடியாகவும், உள்வரத்தாக 114 கனஅடி நீரும், வெளியேற்றம் 135 கன அடியாகவும் இருந்தது. பெருஞ்சாணி அணையின் நீா்மட்டம் 25.60 கன அடியாகவும் உள்வரத்தாக 21 கன அடி நீரும் வந்து கொண்டிருந்தது.

X
Dinamani
www.dinamani.com