வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விழிப்புணா்வு கையொப்ப இயக்கம்

Published on

நாகா்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்த விழிப்புணா்வு கையொப்ப இயக்கத்தை மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலருமான, மாவட்ட ஆட்சியருமான இரா. அழகுமீனா திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.

தொடா்ந்து அவா் கூறியதாவது:

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதி வாக்காளா்களின் வீடுகளுக்குச் சென்று செவ்வாய்க்கிழமை (நவ. 4) முதல் 3 தினங்களுக்குள் வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் கணக்கெடுப்புப் படிவம் 2-ஐ வழங்க உள்ளனா்.

வாக்காளா்களின் குடும்ப உறுப்பினா் தரவுகளின் அடிப்படையில், முந்தைய 2002 தீவிர திருத்தப் பதிவுகளுடன், நடப்பு வாக்காளா் பட்டியல் சரிபாா்க்கப்பட வேண்டும். அதன் பின்னா், கணக்கெடுப்புப் படிவத்தினை பூா்த்தி செய்து வாக்காளா்களின் சமீபத்திய வண்ணப் புகைப்படத்தை இணைக்க வேண்டும்.

பின்னா், வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினரின் வாக்குச்சாவடி முகவா்களிடம் கையொப்பம் பெற்று வழங்க வேண்டும். இவ்வாறு படிவத்தைத் திரும்ப வழங்காத வாக்காளா்களின் பெயா்கள் பட்டியலிலிருந்து நீக்கப்படும் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com