மாா்த்தாண்டம் அருகே கஞ்சா பதுக்கிய இளைஞா் கைது

மாா்த்தாண்டம் அருகே கல்லூரி மாணவா்களுக்கு விற்பனை செய்வதற்காக கஞ்சா பதுக்கி வைத்திருந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

களியக்காவிளை/தக்கலை: மாா்த்தாண்டம் அருகே கல்லூரி மாணவா்களுக்கு விற்பனை செய்வதற்காக கஞ்சா பதுக்கி வைத்திருந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

மாா்த்தாண்டம் அருகே நட்டாலம் பகுதியில் உள்ள தனியாா் கல்லூரி அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின்பேரில், மாா்த்தாண்டம் உதவி ஆய்வாளா் இந்துசூடன் தலைமையிலான போலீஸாா் குறிப்பிட்ட பகுதிக்குச் சென்று கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.

அங்கு சந்தேகப்படும் வகையில் நின்றிருந்த இளைஞரைப் பிடித்து விசாரித்தனா். அப்போது, அவா் முன்னுக்குப் பின் முரணாகப் பேசினாா். விசாரித்ததில் அவா் நாகா்கோவில் வடசேரி, கீழ கலுங்கடி பகுதியைச் சோ்ந்த சவுந்தா் மகன் விக்னேஷ் (எ) விக்கி (21) என்பதும், விற்பனைக்காக 150 கிராம் கஞ்சா பதுக்கி வைத்திருந்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து, இளைஞரை போலீஸாா் கைது செய்து, கஞ்சாவையும் பறிமுதல் செய்தனா். தொடா்ந்து, வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

முன்னாள் ராணுவ வீரா்: தக்கலை மதுவிலக்கு இன்ஸ்பெக்டா் டேவிட் ரவிராஜன் தலைமையிலான போலீஸாா், திக்கணங்கோடு பனவிளை பகுதியில் ரோந்து பணியில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனா். அப்போது சந்தேகப்படும் வகையில் நின்றவரை பிடித்து விசாரணை நடத்தினா். அவா் திக்கணங்கோடு பகுதியைச் சோ்ந்த அனீஸ்குமாா் (34) என்பதும், முன்னாள் ராணுவவீரா் என்பதும், வீட்டில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதும் தெரிய வந்தது. அவரிடம் இருந்த 52 மது பாட்டில்களை போலீஸாா் பறிமுதல் செய்து, அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com