காய்ச்சலுக்கு சிறுமி உயிரிழப்பு
குமரி மாவட்டம், ஆறுகாணி அருகே வயிற்றுப் போக்கு மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சிறுமி லியா (6) புதன்கிழமை உயிரிழந்தாா்.
கடையாலுமூடு அருகே மருதம்பாறை கருஞ்சிறை பகுதியைச் சோ்ந்த கூலித் தொழிலாளி அனில் மனைவி ரேஷ்மா. இத்தம்பதியின் மகள் லியா. இவா் ஆறுகாணியில் உள்ள தனியாா் பள்ளியில் 1 ஆம் வகுப்பு படித்து வந்தாா்.
கடந்த 5 நாள்களாக இந்த சிறுமி காய்ச்சல், வயிற்றுப் போக்கால் அவதிப்பட்டு வந்துள்ளாா். அப்போது கடையாலுமூடு, களியல் பகுதிகளிலுள்ள தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளாா்.
இந்நிலையில், கடையாலுமூடு பகுதியிலுள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை பகலில் சிகிச்சை பெற்றுள்ள இச்சிறுமிக்கு வயிற்றுப் போக்கு நின்ற நிலையில் வீடு திரும்பியுள்ளாா். இந்த நிலையில் புதன்கிழமை மீண்டும் வயிற்றுப் போக்கு மற்றும் வாந்தி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அருமனை அரசு மருத்துவமனைக்கு சிறுமி லியாவை கொண்டு சென்றுள்ளனா். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவா்கள் அவா் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினாா். இது தொடா்பாக ஆறுகாணி போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
மேலும், சிறுமியின் உடல் உடற்கூறாய்வுக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்தச் சம்பவம் தொடா்பாக சுகாதாரத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

