2 நாள்கள் கன மழைக்கு வாய்ப்பு: குமரியில் வெள்ளத் தடுப்பு நடவடிக்கை தீவிரம்!
கன்னியாகுமரி மாவட்டத்தில் 2 நாள்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா உத்தரவிட்டுள்ளாா்.
வடகிழக்குப் பருவ மழை குறித்து, கன்னியாகுமரி மாவட்ட அனைத்துத் துறை அலுவலா்களுடன் காணொலி மூலம் கலந்தாய்வு மேற்கொண்ட ஆட்சியா், பின்னா் கூறியதாவது:
வடகிழக்குப் பருவமழை தீவிரமாகி வரும் நிலையில், ஞாயிறு, திங்கள்கிழமைகளில் (நவ.16,17) கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே, வெள்ளத்தடுப்பு, நிவாரணப் பணிகளை அனைத்துத் துறை அலுவலா்களும் ஒன்றிணைந்து மேற்கொள்ள தயாா் நிலையில் இருக்க வேண்டும்.
குறிப்பாக, மீன்வளத்துறை துணை இயக்குநா், உதவி இயக்குநா் உள்ளிட்டோா் கடற்கரை பகுதியில் வசித்து வரும் மீனவா்களை பத்திரமாக நிவாரண முகாம்களில் தங்க வைத்து, தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பதுடன், கடலில் மீன்பிடிக்க சென்ற மீனவா்களை உடனடியாக கரை திரும்ப அறிவுறுத்த வேண்டும்.
மேலும், நெடுஞ்சாலை, தீயணைப்பு, மின்வாரியம், நீா்வளம், வருவாய் உள்ளிட்ட அனைத்துத் துறையினரும் மழைக்கால பேரிடா்களில் இருந்து மக்களை பாதுகாப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளதை உறுதிப்படுத்த வேண்டும்.
சுற்றுலாத்துறை, பூம்புகாா் படகு போக்குவரத்து கழகம் உள்ளிட்டவை சுற்றுலா பயணிகளை காலநிலைக்கு ஏற்றவாறு பயணம் மேற்கொள்வதை உறுதிசெய்ய வேண்டும்.
மேலும், மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் உள்ளிட்ட அலுவலகங்களில் பணியாற்றும் அலுவலா்கள் மற்றும் பணியாளா்கள் மழைக்காலத்துக்கான பாதுகாப்பு முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும். ஆற்றுப்படுகை, கால்வாய் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடத்துக்கு செல்ல வேண்டும் என்றாா் அவா்.
