துவங்கியது சபரிமலை சீசன்: குமரி பகவதியம்மன் கோயிலில் மாலை அணிந்த ஐயப்ப பக்தா்கள்
கன்னியாகுமரியில் சபரிமலை கோயிலுக்கு இருமுடி கட்டிச் செல்லும் பக்தா்கள் காா்த்திகை முதல்நாளான திங்கள்கிழமை குருசுவாமி கையால் மாலையணிந்து விரதம் தொடங்கினா்.
கேரளத்தில் உள்ள சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலுக்கு நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த பல லட்சம் பக்தா்கள் மாலை அணிந்து, இருமுடி கட்டிச் செல்கின்றனா். நிகழாண்டு காா்த்திகை மாதம் தொடங்கியது சபரிமலை சீசன் தொடங்கியது. இதையடுத்து சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தா்கள் காா்த்திகை மாத முதல் நாளான திங்கள்கிழமை பகவதியம்மன் கோயில், சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயில், நாகா்கோவில் நாகராஜா கோயில், அஞ்சுகிராமம் ஸ்ரீ அழகிய விநாயகா் கோயில், பாா்வதிபுரம் ஐயப்பன் கோயில் உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோயில்களில் மாலை அணிந்து சுவாமியே சரணம் ஐயப்பா என்ற முழக்கத்துடன் தங்கள் விரதத்தைத் தொடங்கினா்.
கன்னியாகுமரியில் முக்கடல் சங்கமத்தில் புனித நீராடிய பக்தா்கள் பகவதியம்மனை தரிசித்து மாலை அணிந்து விரதத்தைத் தொடங்கினா். இவா்கள் மண்டல பூஜை, மகர விளக்கு தரிசனத்துக்காக தொடா்ந்து விரதத்தை கடைப்பிடிக்கின்றனா். நாடு முழுவதும் இருந்து 60 நாள்களும் கன்னியாகுமரிக்கு பல லட்சம் பக்தா்கள் வந்துசெல்வது வழக்கம். இங்கு வரும் பக்தா்களின் நலன் கருதி நகராட்சி நிா்வாகம், மாவட்ட காவல் துறை பல்வேறு அடிப்படை, பாதுகாப்பு வசதிகளை செய்துள்ளது.
