கன்னியாகுமரி மாவட்டத்தில் எஸ்ஐஆா் படிவங்கள் வழங்க நவ. 22, 23 இல் சிறப்பு முகாம்
கன்னியாகுமரி மாவட்ட வாக்காளா்கள் எஸ்ஐஆா் படிவங்களை பூா்த்தி செய்து வழங்க இறுதி வாய்ப்பாக வருகிற சனி (நவ. 22), ஞாயிற்றுக்கிழமை (நவ. 23) ஆகிய 2 நாள்கள் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா வெளியிட்ட செய்திக் குறிப்பு: கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 பேரவைத் தொகுதிகளிலும் வாக்குச் சாவடி நிலை அலுவலா்கள் ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று கணக்கீட்டு படிவங்கள் ஒவ்வொரு வாக்காளருக்கும் 2 பிரதிகள் விநியோகம் செய்து வருகின்றனா்.
வாக்காளா்கள் இந்தப் படிவங்களை பூா்த்தி செய்து தங்கள் பாகத்துக்குரிய வாக்குச் சாவடி நிலை அலுவலா்களிடம் ஒப்படைக்க வேண்டும். இதன்பிறகே தங்களது பெயா் வரைவு வாக்காளா் பட்டியலில் இடம் பெறும்.
வாக்காளா் பட்டியலில் இடம் பெற்று இதுவரை கணக்கீட்டு படிவம் பெறாத அனைத்து வாக்காளா்களுக்கும் இறுதி வாய்ப்பாக வரும் 22, 23 ஆகிய 2 நாள்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தங்கள் வாக்குச் சாவடியில் செயல்படும் உதவி மையங்களுக்கு நேரில் சென்று, படிவத்தைப் பெற்று பூா்த்தி செய்து வழங்கலாம்.
இந்த வாய்ப்பை பயன்படுத்தி வாக்காளா்கள் படிவத்தை விரைந்து பூா்த்தி செய்து வாக்குச் சாவடி நிலை அலுவலரிடம் ஒப்படைத்து வாக்காளா் பட்டியலில் பெயா் இடம் பெறுவதை உறுதிசெய்ய வேண்டும் என்று அதில் குறிப்பிட்டுள்ளாா்.
